இந்தியா

அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்: காஷ்மீரில் ராணுவத் தளபதி ஆய்வு

DIN

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக ராணுவத் தளபதி விபின் ராவத் செவ்வாய்க்கிழமை ஸ்ரீநகர் வந்தார்.
இது தொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அவரிடம் காஷ்மீரில் காணப்படும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் எடுத்துரைப்பார்கள் என்று தெரிகிறது. அவரிடம் காஷ்மீர் மாநில காவல்துறை டிஜிபி கலந்துரையாடுவார் என்று தெரிகிறது. மேலும் சிஆர்பிஎஃப் படைப்பிரிவின் தலைவருடனும் ராவத் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
பிரணாப் வலியுறுத்தல்: ஜம்மு- காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தி 7 பேரை கொலை செய்த பயங்கரவாதிகளை நீதியின் முன்பு நிறுத்த வேண்டுமென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
ஹமீது அன்சாரி இரங்கல்: அமர்நாத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அதிர்ச்சியும், இத்தாக்குதலில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'இத்தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். இதுபோன்ற வன்முறைச் செயல்களை நியாயப்படுத்தவே முடியாது. மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றத்துக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், இத்தாக்குதலை நடத்தியவர்கள், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் ஆகியோர் தண்டிக்கப்பட
வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
துணை முதல்வர் வலியுறுத்தல்: காஷ்மீர் மாநில துணை முதல்வர் நிர்மல் சிங், செய்தியாளர்களிடம் கூறுகையில் 'ஜம்மு- காஷ்மீர் மாநில அரசு உஷார்நிலையில் உள்ளது. எனவே பக்தர்கள் அமர்நாத் யாத்திரையைத் தொடர வேண்டும்' என்றார்.
தேசத்தின் மீதான தாக்குதல் -  சிவசேனை: அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலானது, தேசத்தின் மீதான தாக்குதல் என்று சிவசேனை விமர்சித்துள்ளது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு உரிய பதிலடி கொடுப்பதற்கு இதுவே சிறந்த தருணம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
மோடி அரசின் தோல்வி -  விஎச்பி :
'மத்தியில் மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மோடி அரசு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவதில் தோல்விகண்டு விட்டது. அதன் விளைவே அமர்நாத் யாத்ரிகர்கள் மீதான தாக்குதல்' என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) குற்றம்சாட்டியுள்ளது.
தலைவர்கள் கண்டனம்: அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலை வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் உள்ளிட்ட தலைவர்களும், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பினரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
ஜம்முவில் போராட்டம்: இத்தாக்குதலைக் கண்டித்து ஜம்மு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ், பஜ்ரங் தளம், சிவசேனை உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. ஜம்மு, உதம்பூர், கதுவா, சம்பா ஆகிய மாவட்டங்களில் போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்தனர்.
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்: இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக எட்டு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற நூலகத்தில் செவ்வாய்க்கிழமை கூடினர். அப்போது அவர்கள், அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான கோழைத்தனமான தாக்குதலைத் தடுக்கத் தவறியது தொடர்பாக மத்திய அரசு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.
மெஹபூபா ஆறுதல்


அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலை ஜம்மு- காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி வன்மையாகக் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் 'இத்தாக்குதலைக் கண்டு ஒவ்வொரு காஷ்மீரியின் தலையும் வெட்கத்தில் குனிகிறது. இது அனைத்து முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீர் மக்கள் மீது படிந்த கறை' என்று குறிப்பிட்டார். மேலும், ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு மாநில துணை முதல்வர் நிர்மல் சிங்குடன் வந்த அவர், அங்கு திரண்டிருந்த அமர்நாத் யாத்ரீகர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 18 லட்சம் இழப்பீடு
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 6 லட்சம் இழப்பீட்டை ஜம்மு- காஷ்மீர் மாநில அரசு அறிவித்துள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. தவிர, பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோதிலும் துணிச்சலுடன் பேருந்தை வேகமாக இயக்கி மற்ற பயணிகளைக் காப்பாற்றியதற்காக அதன் ஓட்டுநர் சலீம் கஃபூருக்கு ரூ.3 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஜம்மு- காஷ்மீர் மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.7 லட்சம் இழப்பீட்டையும், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியையும் அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேசமயம், பலியான அமர்நாத் யாத்ரீகர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீட்டை வழங்கப் போவதாக அமர்நாத் கோயில் வாரியம் அறிவித்துள்ளது. இந்த மூன்று இழப்பீட்டையும் சேர்த்தால், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.18 லட்சம் இழப்பீடு கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT