இந்தியா

ஏர்செல் -  மேக்சிஸ் வழக்கு: முடக்கப்பட்ட ரூ. 742 கோடி சன் குழும சொத்துகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

DIN

ஏர்செல் -  மேக்சிஸ் வழக்கில் முடக்கப்பட்ட சன் குழும நிறுவனங்களின் ரூ. 742 கோடி சொத்துகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், எஸ்.கே. கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சன் குழும நிறுவனங்களின் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி, 'ஏர்செல் -  மேக்சிஸ் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் மாறன் சகோதரர்களை விடுவித்துள்ளது. இந்த நிலையில், வழக்கு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ள சொத்துகளையும் விடுவிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டனர்.
இதற்கு மத்திய அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆனந்த் குரோவர் ஆட்சேபம் தெரிவித்தார்.
அவர் வாதிடுகையில், 'ஏர்செல் -  மேக்சிஸ் வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் முழுமையாக நிறைவடையவில்லை. மலேசியா நிறுவனம் தொடர்புடைய வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், ஏர்செல் -  மேக்சிஸ் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும், முடக்கப்பட்ட சொத்துகள் தொடர்பாகவும் தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது.
ஆனால், அதற்கு தில்லி உயர் நீதிமன்றம் தடை விதிக்காமல், நோட்டீஸ் அளித்துள்ளது. இந்த நிலையில், ஏர்செல் -  மேக்சிஸ் வழக்கில் முடக்கப்பட்ட சன் குழும நிறுவனங்கள் சொத்துகளை விடுவித்தால் விசாரணையைப் பாதிக்கும்' என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், 'ஏர்செல் -  மேக்சிஸ் வழக்கில் முடக்கப்பட்ட சன் குழும நிறுவனங்களின் சொத்துகளை விடுவிக்க முடியாது. இது தொடர்பாக அமலாக்கத் துறை ஒரு வாரத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கிறோம்' எனத் தெரிவித்தனர்.
பின்னணி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கடந்த பிப்ரவரி 2- ஆம் தேதி தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி பிறப்பித்த உத்தரவில், 'இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முகாந்திரமோ, உரிய ஆதாரங்களோ இல்லை. எனவே, அவர்களை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ தொடுத்த வழக்கிலும் அவர்கள் சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை கடந்த மே 2- ஆம் தேதி மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT