இந்தியா

தன்னுடைய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கே வராத நாகாலாந்து முதல்வர்!

PTI

கோஹிமா: தன்னுடைய அரசு மீது இன்று நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நாகாலாந்து முதல்வர் ஷுரோசெலி லீசீட்சு வராத காரணத்தால், நாகலாந்து சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பேரவையின் தற்போதைய பலமான 59 எம்.எல்.ஏக்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 43 பேர் முதல்வர் லீசீட்சுவை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்களை முன்னாள் முதல்வர் டி.ஆர்.ஜேலியாங் வழிநடத்தி வருகிறார்.

அவர் தற்போதைய முதல்வர் லீசீட்சு பதவி விலக வேண்டும் என்று கோரி வருகிறார். மேலும், அண்மையில் ஆளுநர் பி.பி.ஆóசார்யாவைச் சந்தித்த ஜேலியாங், தமக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதால் தம்மை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார். இதையடுத்து, சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் ஆச்சார்யா, முதல்வர் லீசீட்சுக்கு கடந்த 11 மற்றும் 13-ஆம் தேதிகளில் உத்தரவிட்டார்.

எனினும், அவரது உத்தரவை நாகாலாந்து அமைச்சரவை நிராகரித்தது. ஆளுநரின் உத்தரவுக்குத் தடை விதிக்குமாறு கோரி முதல்வர் லீசீட்சு குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தின் கொஹிமா கிளையில் கடந்த 14-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதிகள், முதல்வரின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்காக நாகாலாந்து சட்டப் பேரவையை இன்று காலை 9.30 மணிக்குக் கூட்டுமாறு பேரவைத் தலைவர் இம்திவாபாங் ஏயருக்கு ஆளுநர் ஆச்சார்யா உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை முன்னாள் முதல்வர் டி.ஆர்.ஜேலியாங் தனது ஆதரவாளரகளுடன்  அவைக்கு வந்திருந்தார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பினை கோர வேண்டிய முதல்வர் ஷுரோசெலி லீசீட்சுவோ .அவரது ஆதரவாளர்களோ அவைக்கு வரவில்லை. அவர்களைத் தொடர்பு கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

இறுதியில் அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் இம்திவாபாங் ஏயர் அறிவித்தார், அத்துடன் நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநருக்கு அறிக்கை அளிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT