இந்தியா

14-ஆவது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

DIN

நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் (71) செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். இப்பதவிக்கு வரும் முதல் பாஜக தலைவரும், இரண்டாவது தலித் சமூகத்தவரும் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் பதவிக்கு கடந்த 17-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீரா குமாரைத் தோற்கடித்தார். கோவிந்த் 65 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். அவருக்கு தில்லியில் நாடாளுமன்ற வளாத்தில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கோவிந்த் ஹிந்தி மொழியில் பதவியேற்றார். அப்போது அங்கு திரண்டிருந்த குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவ கௌடா, முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமைச்சர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
ராம்நாத் கோவிந்த் பதவியேற்பைத் தொடர்ந்து அவருக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது. பதவிப் பிரமாணம் முடிந்ததும் மேடையில் கோவிந்தும், பிரணாப் முகர்ஜியும் பரஸ்பரம் இருக்கை மாறி அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து கோவிந்த் குடியரசுத் தலைவர் என்ற முறையில் முதல் உரையை ஆற்றினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பிறந்தவரான கோவிந்த், வணிகவியலில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவர் பின்னர் கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். தில்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார். அவர் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்குரைஞராக 1980 முதல் 1993 வரை பதவி வகித்தார்.
பாஜகவின் தலித் பிரிவுத் தலைவராக 1998 முதல் 2002 வரை பொறுப்பு வகித்து வந்தார். அகில இந்திய கோலி சமாஜத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக 1994 முதல் 2006 வரை இரு முறை தொடர்ச்சியாகப் பதவி வகித்தார். பிகார் ஆளுநராக இருந்த அவர், அண்மையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனுக்குப் பிறகு இந்த உயர் பதவிக்கு வந்துள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆவார். பாஜகவைச் சேர்ந்த ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

'பன்முகத்தன்மையே இந்தியாவின் வெற்றிக்கான திறவுகோல்'
புதுதில்லி, ஜூலை 25: பன்முகத்தன்மையே இந்தியாவின் வெற்றிக்கான திறவுகோல் என்று புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விழாவில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பின் அவர் ஆற்றிய உரை:
ஒரு தேசம் என்ற முறையில் நாம் நிறைய சாதித்துள்ளோம். எனினும் இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும், வேகமாகச் செய்ய வேண்டும் என்ற முயற்சி தொடர்கிறது.
புத்தர் அவதரித்த மண்ணான இந்தியா, அமைதியையும், சூழலியல் சமத்தன்மையையும் நாடும் இந்த உலகிற்கு வழிகாட்டுவதே பொருத்தமாக இருக்கும்.
பன்முகத்தன்மையே இந்தியாவின் வெற்றிக்கான திறவுகோலாகும். இந்த பன்முகத்தன்மையே நம்மை விசேஷமானவர்களாக்குகிறது. பொருளாதார சக்தியாகவும், தார்மிக முன்மாதிரியாகவும் திகழக் கூடிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டியுள்ளது.
நாட்டை கல்வியறிவு படைத்த, நீதிநெறி சார்ந்த, சமத்துவம் நிறைந்த சமூகமாகவும், உயர் வளர்ச்சி கொண்ட பொருளாதார சக்தியாகவும் உருவாக்குவது அவசியமாகும்.
தேசங்களை அரசுகள் மட்டுமே கட்டமைப்பதில்லை. அதற்குத் தேசியப் பெருமித உணர்வும் அவசியமாகும். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுமே தேசத்தை நிர்மாணிப்பவர்தான். பயங்கரவாதத்தையும் குற்றங்களையும் எதிர்த்துப் போராடும் போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் தேசத்தை நிர்மாணிப்பவர்களே. வீட்டிலும் பணியிடத்திலும் பல்வேறு கடமைப் பொறுப்புகள் இருந்தபோதிலும், குழந்தைகளை லட்சியக் குடிமக்களாக வளர்த்தெடுக்கும் பெண்களும் தேசத்தைக் கட்டியெழுப்புபவர்கள்தான்.
சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தின்கீழ் வயலில் உழைத்து, மற்ற குடிமக்களுக்கு உணவளிக்கப் பாடுபடும் விவசாயியும், இந்திய விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பவோ, ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கவோ ஓய்வின்றிப் பாடுபடும் விஞ்ஞானியும் தேசத்தை நிர்மாணிக்கின்றனர்.
தொலைதூர கிராமத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய சிசிச்சை அளிக்கும் செவிலியர், மருத்துவர், புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கி மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் இளைஞர் ஆகியோரும் இந்த நாட்டுக்காகவே உழைக்கின்றனர் என்றார் கோவிந்த்.
முன்னதாக, அவர் பதவியேற்றதும் 'நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றதன் மூலம் நான் கௌரவிக்கப்பட்டுள்ளேன். அடக்கத்துடன் பொறுப்புகளை நிறைவேற்றுவேன்' என்று தெரிவித்தார்.

முக்கியமான மைல் கல்: மோடி
நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுள்ளது, பாஜக சித்தாந்த முன்னோடி சியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கிய பயணத்தில் முக்கியமான மைல் கல் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதிய குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்து தெரிவித்து மோடி சுட்டுரையில் பதிவுகளை வெளியிட்டார்.
அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில் 'குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரை மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்தியாவின் வலிமைகள், ஜனநாயகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அது உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT