இந்தியா

குஜராத் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 44 பேர் கூண்டோடு பெங்களூரில் தஞ்சம்

DIN


பெங்களூரு: குஜராத்தை விட்டு 44 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு அவசர அவசரமாக நேற்று இரவு குஜராத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இப்போது எம்.பி.யாக உள்ள ஸ்மிருதி இரானி, திலீப்பாய் பாண்டியா (இருவரும் பாஜக), அகமது படேல் (காங்கிரஸ்) ஆகியோரது பதவிக்காலம் ஆகஸ்ட் 18-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அகமது படேல் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவருக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பாஜக ராஜ்புத்தை களமிறக்கியுள்ளது. மூவர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் 4 பேர் களமிறங்கியுள்ளது மாநிலங்களவைத் தேர்தல் களத்தில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

47 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளரால் வெற்றி பெற முடியும். காங்கிரஸ் கட்சியில் இருந்து இதுவரை 6 எம்எல்ஏக்கள் விலகிவிட்டனர். அதில் 3 எம்எம்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். எனவே, குஜராத் பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 51-ஆகக் குறைந்துவிட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு கட்சி மாறி வாக்களித்தனர். மாநிலங்களவைத் தேர்தலிலும் இது போன்ற சூழல் ஏற்பட்டால் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் தோல்வியைச் சந்திக்க நேரிடும்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சங்கர்சிங் வகேலா காங்கிரஸில் இருந்து விலகினார். இது குஜராத்தில் காங்கிரஸூக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும், அவர் பாஜகவில் இணைய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதனை முன்னிட்டு, மாநிலங்களவையில் பாஜகவின் பலத்தை அதிகப்படுத்துவதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சம்பவங்களும், எம்எல்ஏக்கள் கடத்தப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களில் வகேலாவுக்கு நெருக்கமான எம்எல்ஏக்களே ராஜிநாமா செய்துள்ளனர்.

இந்நிலையில், வகேலாவுக்கு ஆதரவான மேலும் சில எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்யக்கூடும் என்பதால், அதனை தடுக்கும் விதமாக சென்னைய அடுத்த கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைத்தது போலவே, குஜராத்தை விட்டு 44 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு அவசர அவசரமாக நேற்று இரவு குஜராத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சி நடத்தும் கர்நாடகாவில் அவர்கள் சில நாட்கள் தங்க வைக்கப்படுவதே பாதுகாப்பு என்று கருதி அந்த கட்சி இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

இன்று காலை கர்நாடகா வந்த எம்எல்ஏக்கள் அனைவரும் அங்குள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கட்சியை உடைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதாகவும், அதனைத் தடுக்கவே தாங்கள் பெங்களூரு செல்வதாகவும் எம்எல்ஏ ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT