குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில், பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாஜகவில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, அந்தப் பதவிக்கு ஜூலை மாதம் 17-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 14-ஆம் தேதி தொடங்கி, 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் நிறுத்தப்பட இருக்கிறார்? என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. கூட்டணி கட்சியான சிவசேனை, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்று முன்வைத்த திட்டத்தையும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நிராகரித்து விட்டார்.
காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தரப்பில், குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்த வேண்டிய வேட்பாளர் குறித்து மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிதான் முதலில் தனது முடிவை வெளியிட வேண்டும் என்றும், அதன்பிறகு அந்த வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவதா என்று முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தீவிர ஹிந்துத்துவா சித்தாந்தத்தை கடைபிடிக்கும் நபரை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக பாஜக கூட்டணி நிறுத்தினால், அவரை ஆதரிக்க மாட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாஜகவில் 3 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அமைத்துள்ளார். இதுகுறித்து பாஜக திங்கள்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, வெங்கய்யா நாயுடு ஆகியோர் கொண்ட 3 பேர் குழுவை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அமைத்துள்ளார். இந்த குழுவானது, பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து பாஜக கூட்டணி கட்சிகளுடனும், எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும்.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதுமே இக்குழுவின் முக்கிய நோக்கமாகும் என்று பாஜகவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.