இந்தியா

கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி!

DIN

கொல்கத்தா: கோவையில் கைது செய்யப்பட்டு கொல்கத்தாவுக்கு அழைத்து செல்லப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் திடீர் நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.கர்ணன் சென்னை, கொல்கத்தா ஆகிய உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பணியாற்றிய போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு எதிராக ஊழல் புகார்களைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அவரது நடவடிக்கையை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

அப்போது, நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாலும், அரசியல் சாசன அமர்வு உத்தரவின்படி மன நலப் பரிசோதனைக்கு உடன்பட மறுத்ததாலும், நீதிபதியாக இருந்த கர்ணனின் செயலை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி அவரைக் கைது செய்து ஆறு மாதங்களுக்கு சிறையில் அடைக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலக் காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

இதையடுத்து, மேற்கு வங்க காவல்துறையின் தனிப் படை கர்ணனை கைது செய்ய சென்னை வந்தது. இருப்பினும் கர்ணன் தலைமறைவானதால் அவரைத் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், கோவையில் தங்கியிருந்த கர்ணனை தமிழக காவல்துறை உதவியுடன் மேற்கு வங்க காவல்துறையின் தனிப் படையினர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து புதன்கிழமை கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் அழைத்துச் சென்றனர்.

அப்போது, அவருக்கு கொல்கத்தா விமான நிலையத்தில், அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். தொடர்ந்து அவர் கொல்கத்தா பிரெசிடென்சி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறையில் அடைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வந்த சூழ்நிலையில் திடீரென தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறினார் நீதிபதி கர்ணன்.

இதையடுத்து உடனடியாக வரவழைக்கப்பட்ட சிறை மருத்துவர்கள், அவரை பரிசோதனை செய்தனர். அப்போது மருத்துவர்கள் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், நீதிபதி கர்ணனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார்கள். தற்போது, கொல்கத்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT