இந்தியா

பன்முகத் தன்மையே இந்தியாவின் பலம்: நரேந்திர மோடி

DIN

பன்முகத்தன்மை ஒன்றே இந்தியாவின் பலமும், சிறப்பம்சமும் ஆகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும், நாட்டு மக்களுக்கு ரமலான் வாழ்த்துகளையும் அவர் கூறினார்.
நாட்டு மக்களிடையே மாதந்தோறும் மன்-கீ-பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலமாக அகில இந்திய வானொலியில் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில், ரமலான் பெருவிழாவை முன்னிட்டு அவர் ஆற்றிய உரை வானொலியில் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
முதலில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புனித ரமலானை முன்னிட்டு, இஸ்லாமிய மக்கள் பெரும் பக்தி சிரத்தையுடன் ஒரு மாதகாலம் நோன்பு இருந்து வந்தனர். தற்போது அந்த நோன்பு முடிந்து பண்டிகையைக் கொண்டாடும் தருணத்துக்கு அவர்கள் வந்திருக்கின்றனர். அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்.
அனைவரிடத்திலும் மகிழ்ச்சியை பரப்புவதற்கும், ஒற்றுமையுடன் தேசத்தை முன்னேற்றிக் கொண்டு செல்வதற்கும் ரமலான் போன்ற பண்டிகைகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவை இன்று உலகமே ஆச்சரியத்துடன் நோக்குகிறது என்றால், அதற்கு நமது பன்முகத்தன்மையே காரணமாகும். மற்ற நாடுகளைப் போல நம் இந்தியா ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரத்தைக் கொண்ட நாடு கிடையாது. இங்கு ஆயிரக்கணக்கான மொழிகளும், மதங்களும் இருக்கின்றன. வெவ்வேறான பண்பாடுகளையும், கலாசாரங்களையும் பின்பற்றக் கூடிய மக்கள் இங்கு வாழ்கின்றனர். இருந்தபோதிலும், இந்தியர் என்ற உணர்வுடன் நாம் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதே நமது சிறப்பு. எனவே, இந்தப் பன்முகத்தன்மையை போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.
இந்தத் தருணத்தில், ஆமதாபாதில் ஜகந்நாதர் ரதயாத்திரையில் பங்கேற்றுள்ள ஹிந்துக்களுக்கும் மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மோடி.

அவசரநிலைக் காலத்தை நினைவுகூர்ந்த மோடி

நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட தருணங்களையும், அதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களையும் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.
இதுகுறித்து அவர் மன்-கீ-பாத் நிகழ்ச்சியில் பேசியதாவது:
ஜனநாயக மாண்புகளை கேலிக்கூத்தாக்கிய அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் 42-ஆம் ஆண்டு நினைவு தினம் இதுவாகும். இதே நாளில்தான், கடந்த 1975-ஆம் ஆண்டில் இந்த அவசரநிலையை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பிரகடனப்படுத்தினார்.
ஒரே நாள் இரவில் பிறப்பிக்கப்பட்ட இந்தச் சட்டத்தால் ஒட்டுமொத்த நாடே சிறைச்சாலையாக மாறிப் போனது. அரசுக்கு எதிராகப் பேசுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்டின் நீதித்துறை கூட இந்த அவசர நிலைக்கு அடிபணிந்து போனது. ஊடகங்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டன. இந்தியர் எவராலும் அந்தக் காலகட்டத்தை மறந்துவிட முடியாது.
நாட்டில் உள்ள ஜனநாயகப் பற்றாளர்கள் பலர் இதனை எதிர்த்துப் போராடினர். அவர்களையும் சிறைச்சாலைகள் வரவேற்றன. இருந்தபோதிலும், அவசரநிலைக்கு எதிரான போராட்டம் மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியது. இதனால், அவசர நிலைச் சட்டத்தை இரண்டே ஆண்டுகளில் திரும்பப் பெற வேண்டிய சூழ்நிலைக்கு இந்திரா காந்தி தள்ளப்பட்டார்.
ஜனநாயகத்தை என்றைக்கும் விழிப்புடன் இருந்து காப்பாற்றுவது அவசியம் என நித்தமும் நமக்கு நினைவூட்டும் நாளாக இது அமைய வேண்டும். ஜனநாயகம் ஓர் அமைப்பு அல்ல. அது நமது கலாசாரம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT