சர்ச்சைக்குரிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை விதிப்பது நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது தொடர்பாக கூறியதாவது:
நீதிபதி கர்ணன் நீதிமன்றம் குறித்தும், நீதித் துறையின் செயல்பாடுகள் குறித்தும் அவமதிப்புக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார் என்பதில் இந்த அமர்வில் உள்ள 7 நீதிபதிகளுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. எனவே, அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அவரை உடனடியாக கைது செய்து தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இனிமேல் நீதிபதி கர்ணன் பிறப்பிக்கும் உத்தரவுகள் எதையும், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட எந்த ஊடகமும் வெளியிடக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, மேற்கு வங்க அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டுமென்று முன்பு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து அவர் அறிக்கை அளித்தார்.
அதில், நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவக் குழுவும், கொல்கத்தா காவல் துறை தலைவரும் நீதிபதி கர்ணன் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, தான் முழு உடல் நலன், மனநலனுடன் இருப்பதாக நீதிபதி கர்ணன் ஒரு கடிதத்தை அளித்தார் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், நீதிபதி கர்ணன் அளித்த கடிதத்தையும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி வாசித்துக் காட்டினார்.
மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் மணீந்தர் சிங் இது தொடர்பாக நீதிமன்றத்தில் கூறுகையில், 'என்ன செய்கிறோம் என்று தெரிந்துதான் அனைத்தையும் நீதிபதி கர்ணன் செய்துள்ளார். எனவே, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக 7 உத்தரவுகளைப் பிறப்பித்த அவரை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்க வேண்டும்' என்றார்.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் உச்ச நீதிமன்றத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், தனது பணியிட மாற்றத்துக்கு கர்ணன் தானே தடைவிதித்துக் கொண்டார். இதையடுத்து, அவருக்கு வழக்குகளை ஒதுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
'நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் குறிவைக்கப்படுகிறேன்' என்று கூறிய நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்து நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
இதையடுத்து, நீதிபதி கர்ணன் கடந்த மார்ச் 31-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, அவர் பதிலளிக்க 4 வாரம் அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம், அவர் நீதிமன்றப் பணிகளில் ஈடுபடக் கூடாது என்று விதித்த தடையை திரும்பப் பெற மறுத்துவிட்டது.
இதனிடையே, நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 'உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊழல் கறை படிந்தவர்கள்' என்று நீதிபதி கர்ணன் குற்றம்சாட்டினார்.
மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தன் முன்பு ஆஜராக வேண்டுமென்றும், இல்லையென்றால் அவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நீதிபதி கர்ணன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.