இந்தியா

முத்தலாக் முறையை ரத்து செய்தால் மாற்று சட்டம் கொண்டு வருவோம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்! 

DIN

புதுதில்லி: இஸ்லாமிய சமூகத்தில் மணமுறிவுக்கு பயன்படுத்தப்படும் முத்தலாக் நடைமுறையை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவித்தால், அதற்கு மாற்றாக சட்டம் நிறைவேற்றத் தயார் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருமண பந்தத்தில் உள்ள இஸ்லாமிய ஆண் வாய்மொழியாக மூன்று முறை 'தலாக்' என்று தெரிவித்தால் மணமுறிவு ஏற்படும் என்ற நடைமுறை இஸ்லாமியர்கள் மத்தியில் பின்பற்றப்படுகிறது. இதனை எதிர்த்து ஷாயரா பானு, ஆப்ரின் ரஹ்மான் உள்ளிட்ட சில இஸ்லாமிய பெண்களும், குரான் சுன்னத் அமைப்பும் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகிறது. இதுதவிர, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பொதுநல வழக்கு ஒன்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த வழக்கானது அதன் முக்கியத்துவம் கருதி, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் எப்.நாரிமன், யு.யு.லலித் மற்றும் , எஸ்.அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விடுமுறைகால நீதிமன்ற அமர்வில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய வாதம் இன்று மூன்றாவது நாளாக நடைபெறுகிறது. விசாரணையின் பொழுது,  "தலாக் முறை செல்லாது என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டால் இஸ்லாமிய ஆண்கள் திருமண ரத்திற்கு என்ன வழி?" என்று அமர்வு கேள்வி எழுப்பியது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி அதற்கு பதிலளித்த பொழுது , "இஸ்லாமிய சமூகத்தில் மணமுறிவுக்கு பயன்படுத்தப்படும் முத்தலாக் நடைமுறையை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என நீதிமன்றம் அறிவித்தால், அதற்கு மாற்றாக சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறது. அந்த சட்டமானது இஸ்லாமிய சமூகத்தினரின் திருமணம் மற்றும் விவாகரத்து முறைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் அமையும்" என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT