தூய்மையான பராமரிப்பு: விசாகப்பட்டினம் ரயில் நிலையத்துக்கு முதலிடம்
நாட்டிலேயே மிகத் தூய்மையாக பராமரிக்கப்படும் ரயில் நிலையமாக ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் ரயில் நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மிகத் தூய்மையாக பராமரிக்கப்படும் ரயில் நிலையமாக ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் ரயில் நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 'தூய்மை ரயில்' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 407 ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரயில் நிலைய நடைமேடைகளில் அமைக்கப்பட்டிருக்கும் கழிப்பிடங்கள், ரயில் இருப்புப் பாதைகள், பராமரிக்கப்படும் குப்பைத் தொட்டிகள் உள்ளிட்டவற்றை அளவுகோளாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மிகவும் பரபரப்பாக இயங்கும் ரயில் நிலையங்கள், பரபரப்பாக இயங்கும் ரயில் நிலையங்கள், சாதாரண ரயில் நிலையங்கள் என ஏழு பிரிவுகளின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வு முடிவை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தில்லியில் புதன்கிழமை வெளியிட்டார். இதில், மிகவும் பரபரப்பாக இயங்கும் 75 ரயில் நிலையங்களில் தூய்மையாகப் பராமரிக்கப்படும் ரயில் நிலையமாக விசாகப்பட்டினம் ரயில் நிலையம் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது இடத்தை ஆந்திரத்தின் செகந்தராபாத் ரயில் நிலையமும், மூன்றாவது இடத்தை ஜம்மு ரயில் நிலையமும் பிடித்துள்ளன.
தில்லி ரயில் நிலையம் 39-ஆவது இடத்திலும், தில்லியில் உள்ள ஆனந்த் விகார் ரயில் நிலையம் 5-ஆவது இடத்திலும் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்தத் தொகுதியான வாராணசி ரயில் நிலையம் 14-ஆவது இடத்தில் உள்ளது. நாட்டிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையமாக பிகாரின் தர்பங்கா ரயில் நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.