இந்தியா

காஷ்மீர் பிரச்னைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு: ராஜ்நாத் சிங்

DIN

காஷ்மீர் பிரச்னைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் பெல்லிங் நகரில் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
காஷ்மீரில் பிரச்னையைத் தூண்டிவிடுவதன் மூலம் இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது. எனினும், எங்களது அரசு காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும். காஷ்மீர் நமக்குச் சொந்தமானது; காஷ்மீரிகள் நமக்குச் சொந்தமானவர்கள்; காஷ்மீர் பண்பாடு நமக்குச் சொந்தமானது. அங்கு ஏற்படும் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்போம்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளும் என்று நம்புவோம். அவ்வாறு திருத்திக்கொள்ளாவிட்டால், நாம்தான் அவர்களைத் திருத்த வேண்டியிருக்கும். உலகமயமாக்கலுக்குப் பிறகு, ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை மற்றொரு நாடு குலைப்பது சாத்தியம் கிடையாது. காரணம், அவ்வாறு செய்வதை சர்வதேச சமுதாயம் அனுமதிக்காது என்றார் அவர்.
முன்னதாக, காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் கடந்த மாதம் (ஏப்ரல்) 9-ஆம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலின்போது நடைபெற்ற வன்முறையில் 8 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தத் தேர்தலில் வெறும் 7.14 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.
மேலும், காஷ்மீரில் அபாயகரமான சூழல் நிலவுவதால் அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெறவிருந்த மக்களவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளிவைத்தது. இத்தகைய பதற்றமான சூழலில், காஷ்மீர் பிரச்னை குறித்து ராஜ்நாத் சிங் இவ்வாறு நம்பிக்கையுடன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாள் பயணமாக சிக்கிம் மாநிலம் வந்துள்ள ராஜ்நாத் சிங், அந்த மாநிலத்தின் பாதுகாப்பு நிலவரம், வளர்ச்சிப் பணிகள், சீன எல்லைக் கண்காணிப்பு ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், திபெத், சீனா, நேபாள ஆகிய நாடுகளுடனான நமது எல்லைகளைக் காவல் காக்கும் படையினரின் நிலைகளுக்குச் சென்று அவர் பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT