இந்தியா

தாயைக் கொன்று ரத்தத்தில் ஸ்மைலி வரைந்த மகன் ராஜஸ்தானில் கைது

DIN

மும்பை: ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்து வந்த மும்பை காவல்துறை அதிகாரி தியானேஷ்வரின் மனைவியைக் கொலை செய்த மகன் சித்தாந்த், ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை காவல்துறையினர் அளித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜோத்புர் காவல்துறையினர் நடத்திய சோதனையில், 21 வயதான சித்தாந்த் கனோர் ஜோத்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் தனது தாயை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை ஆய்வாளர் தியானேஷ்வர் கனரின் மனைவி தீபாலி(42), கடந்த செவ்வாய்க்கிழமை அவர்களது வெர்சோவா வீட்டில் கொலை செய்யப்பட்டார். அன்றைய தினத்தில் இருந்து அவர்களது மகன் சித்தாந்த் காணாமல் போயிருந்தான்.

கொலை செய்யப்பட்ட இடத்தில், தீபாலியின் ரத்தத்தால் ஸ்மைலி வரைந்து, 'முடிந்தால் என்னைப் பிடித்துத் தூக்கில் போடுங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கம் காணாமல்  போயிருந்தது. 

முதலில் வெளிநபர் யாரோ இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்த காவல்துறைக்கு, இந்த கொலையில், தீபாலியின் மகனே ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திய சித்தாந்த் தற்போது தேசியக் கல்லூரியில் படித்து வந்தார். சித்தாந்த்தின் நடவடிக்கைகள் சில மாதங்களாக முரண்பாடாக இருந்ததாக அவர்களது நண்பர்களும் கூறியுள்ளனர்.

மகன் படிக்காததால், மனம் வெறுத்த தீபாலி, அவனது செலவுக்குப் பணம் கொடுப்பத்தை நிறுத்திவிட்டார் என்று தெரிய வந்தது. இதுபோன்ற ஏதேனும் ஒரு பிரச்னையில் தாய்-மகன் இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர்.

தீபாலி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8-9 மணியளவில் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவரது கணவர் தியானேஷ்வர் கனர் வீட்டுக்கு வந்த போதுதான் கொலை நடந்த சம்பவம் வெளியே தெரிய வந்தது.

வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர், ரத்தம் தோய்ந்த சித்தாந்தின் ஆடைகள் கழிவறையில் இருந்ததைப் பார்த்தனர். இதையடுத்து சித்தாந்த் தான் கொலையை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகத்தை உறுதிப்படுத்தினர்.

ஜோத்பூரில் கைது செய்யப்பட்ட சித்தாந்த், வழக்கமாக எனக்கும் தாய்க்கும் கடும் சண்டை ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் அன்றைய தினம் கோபத்தால் நான் என் கட்டுப்பாட்டை இழந்து அவரை கொன்றுவிட்டேன் என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT