இந்தியா

ஹிஸ்புல் பயங்கரவாதி கொலை எதிரொலி காஷ்மீரில் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் விதிப்பு

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் பிராந்தியத் தளபதி சப்ஜர் அகமது பட் கொல்லப்பட்டதை அடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சனிக்கிழமை ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் இயக்கத்தின் காஷ்மீர் பிராந்தியத் தலைவர் சப்ஜர் அகமது பட்டும், ஃபைசான் முசாஃபர் என்ற மற்றொரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர். அதன் எதிரொலியாக, பள்ளத்தாக்குப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்ரீநகர் அருகே உள்ள கன்யார், நவாட்டா, சஃபாகடல், எம்.ஆர்.குஞ்ச், ரைனவாரி, கிரால்குத், மைசுமா ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தடை
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்தநாக், புல்வாமா, சோபியான் ஆகிய மாவட்டங்களிலும், வடக்கு காஷ்மீரில் உள்ள சோபோ நகரிலும் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மத்திய காஷ்மீரில் உள்ள பட்காம், கந்தர்பால் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதற்காக, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இந்தக் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டித் தேர்வு எழுதிய மாணவர்களும், தேர்வறை கண்காணிப்பாளர்களும் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து வெளியில் நடமாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஸ்ரீநகரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும், உயர்நிலைப் பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளத்தாக்குப் பகுதியில் இணையதள சேவையும், செல்லிடப்பேசி சேவையும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட சப்ஜர் அகமது பட்டின் உடல், ரத்சுனாவில் உள்ள இடுகாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து, 2 நாள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பிரிவினைவாதத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யாசின் மாலிக் கைது: இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் யாசின் மாலிக், ஸ்ரீநகரில் லால் செüக் அருகே உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர், ஸ்ரீநகர் மத்தியச் சிறையில் அவர் அடைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, என்கவுன்ட்டரில் உயிரிழந்த சப்ஜர் அகமது பட், ஃபைசான் முசாஃபர் ஆகியோரின் வீட்டுக்குச் சென்று யாசின் மாலிக் இரங்கல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT