முகப்பு
இந்தியா

போலீஸ் தம்பதியரின் மகளுக்கே இந்த நிலையா? எங்கே செல்கிறது நாடு? 

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் 19 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக தாமதமாக நடவடிக்கை எடுத்த குற்றத்திற்காக 5 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 4 நவம்பர், 2017 at 12:51 PM
பகிர்:

போபால்: மத்திய பிரதேச மாநிலம், போபாலில் 19 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக தாமதமாக நடவடிக்கை எடுத்த குற்றத்திற்காக 5 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக்.,31-ம் தேதி 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் மாலை 7 மணியளவில் யுபிஎஸ்சி பயிற்சி வகுப்பு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஹபிகஞ்ச் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தனியாக நடந்து சென்றபோது அங்கு வந்த நான்கு மர்ம நபர்கள் அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று பாலத்தின் அடியில் கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

அவர்களிடம் இருந்து தப்பித்த மாணவி ரயில்வே சோதனைச் சாவடிக்கு வந்து தன் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். தன் மகளின் நிலையைப் பார்த்து கதறித் துடித்த தந்தை உடனே வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

Advertisement

மறுநாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், மூன்று காவல் நிலையங்களில் மாணவியை அலட்சியப்படுத்தி புகாரை வாங்காமல் இழுத்தடித்துள்ளனர். இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் பெற்றோர்கள் இருவரும் காவல்துறையில் பொறுப்பான பதவியில் வேலைபார்க்கின்றனர். 

பின்னர், வணிக வளாகத்தில் குற்றவாளியை அடையாளம் காட்டினாள் மாணவி. உடனே மாணவியின் பெற்றோர் இரண்டு பேரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு மறுநாள் இரவு 7 மணியளவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  அதன்பிறகு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து புகாரை பதிவு செய்யாமல் அலைக்கழித்த குற்றத்திற்காக 5 போலீசார் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கை விசாரிக்க டிஐஜி சுதிர் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நான்காவது குற்றவாளியை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். நாங்கள் இருவரும் காவல் துறையில் பணியாற்றியும் தங்கள் மகளை காப்பாற்ற முடியவில்லையே என்று மாணவியின் தாய் கதறி அழுதார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.