முகப்பு
இந்தியா

தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) பயன்படுத்தி வர்த்தகர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதைத் தடுக்கும் வகையில் தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) பயன்படுத்தி வர்த்தகர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதைத் தடுக்கும் வகையில் தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துப் பிறகு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் இது தொடர்பாகக் கூறியதாவது:
இப்போது 50 பொருள்களுக்கு மட்டுமே அதிகபட்சமாக 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அண்மையில் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. வரிக் குறைப்பின் பயன்கள் முழுமையாக நாட்டு மக்களுக்கு கிடைக்கும் வகையிலும், வர்த்தகர்கள் ஜிஎஸ்டியை பயன்படுத்தி மிகையாக லாபத்தை ஈட்டுவதைத் தடுக்கும் நோக்கத்திலும் தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையம் அமைக்கப்படவுள்ளது. ஜிஎஸ்டி வரிக் குறைப்பின் பயன்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிந்தால் பொதுமக்கள் இந்த ஆணையத்திடம் புகார் அளிக்கலாம்.
ஜிஎஸ்டி-யின் பயன்கள் நாட்டு மக்களுக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையம் உடனடியாக அமைக்கப்பட இருக்கிறது என்றார்அவர்.
முன்னதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அமைச்சரவைச் செயலர் பி.கே. சின்ஹா தலைமையில் 5 பேர் அடங்கிய தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையத்தை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரியின் பயன்கள் மக்களுக்கு கிடைக்காதது தொடர்பான புகார்கள் முதலில் மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்படும். புகார் சரியாக இருந்தால் அடுத்த கட்டமாக நிதித் துறை பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும், அவர்கள் விசாரணை நடத்தி அடுத்த கட்டமாக புகாரை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கும்.
ஒரு நிறுவனம் ஜிஎஸ்டி-யின் பயன்களை நுகர்வோருக்கு அளிக்கவில்லை என்பது தெரிந்தால், அந்த நுகர்வோருக்கு உரிய பணத்தை நிறுவனம் அளிக்க வேண்டுமென்று உத்தரவிடப்படும். தவறுக்கு ஏற்ப தொழில் நிறுவனம், வர்த்தகரின் உரிமத்தை ரத்து செய்யும் உரிமையும் தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையத்துக்கு உண்டு.
ஜிஎஸ்டி வரிக் கணக்கை நேரடியாக அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம்: இதனிடையே, ஏற்றுமதியாளர்கள் ஜிஎஸ்டி வரிக் கணக்கை நேரடியாக அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என்று மத்திய சுங்க வரித் துறை ஆணையம் தெரிவித்துள்ளது. இணையதளத்தில் இதற்கான வசதி முழுமையாகக் கிடைக்காததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →