பெங்களூரில் தனியார் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்
கர்நாடக தனியார் மருத்துவமனைகள் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை
கர்நாடக தனியார் மருத்துவமனைகள் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை வியாழக்கிழமை வாபஸ் பெற்றனர்.
இதுதொடர்பாக, பெங்களூரு சாமராஜ்பேட்டில் உள்ள இந்திய மருத்துவச் சங்க கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதன் தலைவர் ஜெயண்ணா கூறியது:
கர்நாடக தனியார் மருத்துவமனைகள் சட்ட மசோதா பிற்போக்கானதாகும். இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் அது மருத்துவர்களின் நலனை வெகுவாகப் பாதிக்கும். சட்ட மசோதாவை கொண்டுவரும் திட்டத்தை கைவிடக் கோரி பல்வேறுபோராட்டங்களை நடத்தினோம்.
ஆனால், எங்களது போராட்டத்துக்கு மாநில அரசு செவிசாய்க்காத நிலையில், திங்கள்கிழமை (நவ.13) முதல் 'பெலகாவி செல்வோம்' போராட்டத்தை நடத்தி வந்தோம். இந்த போராட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் சித்தராமையா, 'மருத்துவர்களுக்கு எவ்விதத் தொந்தரவும் ஏற்படாது; நம்பிக்கையோடு இருங்கள்' என்று கூறியிருந்தார். அவரது வார்த்தையை நம்பி போராட்டத்தை படிப்படியாக குறைத்துக் கொண்டோம்.
ஆனால், அதன் பின்னர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ்குமார் அளித்த பேட்டிகள், எங்களது போராட்டத்தைத் தீவிரமாக்கத் தூண்டின. அவசரச் சிகிச்சைப் பிரிவு, டயாலிசிஸ், புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு ஆகியவை தவிர, பிற புற சிகிச்சைப் பிரிவுகளில் பணிகளை வியாழக்கிழமை நிறுத்தினோம்.
இந்த நிலையில், மருத்துவர்களின் வேலைநிறுத்தம் குறித்த பொதுநல மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டது. இதை கருத்தில் கொண்டு, பெங்களூரில் நடைபெற்ற எங்களது போராட்டத்தை கைவிடுகிறோம்.
பெலகாவியில் வெள்ளிக்கிழமை முதல்வர் சித்தராமையா, சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ் குமாரைச் சந்திக்கவிருக்கிறோம். அங்கு எங்கள் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என நம்புகிறோம் என்றார் அவர்.