இந்தியா

முலாயம் சிங்கின் பெயர் இடம்பெறாத சமாஜவாதி தேசிய செயற்குழு பட்டியல்

DIN

சமாஜவாதி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களின் பட்டியலில், கட்சியின் நிறுவனரும், அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங்கின் பெயர் இடம்பெறவில்லை. இதேபோல், அகிலேஷ் யாதவின் சித்தப்பா சிவபால் யாதவின் பெயரும் இடம்பெறவில்லை.
சமாஜவாதி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை, கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் திங்கள்கிழமை வெளியிட்டார். அந்தப் பட்டியலில் 55 உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அதில், முலாயம் சிங், சிவபால் யாதவ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர செளதரி, திங்கள்கிழமை கூறியதாவது: முலாயம் சிங்குக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையேயான கட்சி மோதல், கடந்த ஜனவரி மாதம் உச்சக்கட்டத்தை எட்டியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில், கட்சியின் தலைவர் பதவியை முலாயம் சிங்கிடம் இருந்து அகிலேஷ் யாதவ் கைப்பற்றிக் கொண்டார். அதையடுத்து, கட்சியின் வழிகாட்டும் தலைவராக, முலாயம் சிங் அறிவிக்கப்பட்டார்.
கட்சி விதிகளின்படி, அப்படியொரு பதவி இருக்கிறதா? எனத் தெரியவில்லை. கட்சியின் வழிகாட்டும் தலைவர் பதவியில் முலாயம் சிங் நீடிக்கிறாரா என்றும் தெரியவில்லை என்றார் அவர்.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள தேசிய செயற்குழு பட்டியலில், கட்சியின் தலைமை பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ், கிரோண்மணி நந்தா ஆகியோர் கட்சியின் தேசியத் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸம் கான், நரேஷ் அகர்வால், இந்திரஜித் சரோஜ் உள்பட 10 பேர் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, 10 பேர் செயலர்களாகவும், ஜெயா பச்சன் உள்ளிட்ட 25 பேர் உறுப்பினர்களாகவும், 6 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினரும், முலாயமுக்கு நெருக்கமானவருமான சஞ்சய் சேத், கட்சியின் பொருளாளராகத் தொடர்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பெண்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது’

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

நீா்மோா் பந்தல்: பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

குருவாடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT