முகப்பு
இந்தியா

அமித் ஷா மகன் விவகாரம்: பிரதமர் மோடி மௌனம் கலைப்பது எப்போது?

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விவகாரத்தில், பிரதமர் மோடி எப்போது மௌனத்தை கலைக்கப் போகிறார்?

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விவகாரத்தில், பிரதமர் மோடி எப்போது மௌனத்தை கலைக்கப் போகிறார்? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் வருமானம், கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றப் பின் பன்மடங்கு அதிகரித்துவிட்டதாக, "தி வயர்' என்ற செய்தி இணையதளம் அண்மையில் செய்தி வெளியிட்டது. ஜெய் ஷா நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் ரூ.50 ஆயிரம் என்பதில் இருந்து 16 ஆயிரம் மடங்கு அதிகரித்து ரூ.80 கோடியாக உயர்ந்துவிட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, தனக்கு எதிராக பொய்யான செய்தியை வெளியிட்டதாக, தி வயர் இணையதளம் மீது குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜெய் ஷா அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெய் ஷா தொடர்புடைய செய்திகளை வெளியிடக் கூடாது என்று அந்த இணையதளத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ், "மகனை காப்போம்' திட்டத்தை பாஜக முன்னெடுத்து வருவதாக கூறியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ஜெய் ஷா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர் மௌனம் கலைக்கப் போவது எப்போது? என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், "ஜெய் ஷா குறித்து நானும் பேசமாட்டேன்; மற்றவர்களையும் பேச விடமாட்டேன்' என்றரீதியில் பிரதமர் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள ராகுல், "தி வயர்' இணையதளத்துக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பான செய்தியையும் தனது பதிவில் இணைத்துள்ளார்.
குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், அங்கு அண்மையில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போது, ஜெய் ஷா விவகாரத்தை ராகுல் எழுப்பினார். மேலும், ஜெய் ஷா நிறுவனத்துக்கு விதிகளுக்கு புறம்பாக வழங்கப்பட்டதாக கூறப்படும் கடன்கள் குறித்த விவரத்தையும் காங்கிரஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →