இந்தியா

இமயமலை ஆராய்ச்சியாளர் நைன் சிங் ராவத்துக்கு கௌரவம் அளித்த கூகுள்

DIN

இமயமலை ஆராய்ச்சியாளர் நைன் சிங் ராவத்தின் 187-ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், அவர் மலைகளுக்கு நடுவில் நின்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது போன்ற ஓவியத்தை கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டு கௌரவித்துள்ளது.
தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் குமான் பகுதியில் உள்ள ஜோஹர் பள்ளத்தாக்கில் நைன் சிங் ராவத் கடந்த 1830 ஆம் ஆண்டில் பிறந்தார்.
ஆங்கிலேயர்களுக்காக வட இந்தியப் பகுதிகளை ஆய்வு செய்தவர்களில் இவரும் ஒருவர். திபெத்தை முதன்முதலில் ஆய்வு செய்தவர் என்ற பெருமையும் நைன் சிங் ராவத்தையே சேரும்.
இவர் வாழ்ந்த காலத்தில், மத்திய ஆசியாவின் நிலப்பரப்பு, அப்பகுதி மக்களின் பழக்க-வழக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதில் புவியியல் ஆராய்ச்சியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வந்தது.
அப்போதைய சூழ்நிலையில், திபெத்தில் மேற்கத்தியர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் குறித்து ஆங்கிலேயர்கள் அறிந்துகொள்ள விரும்பினர். குறிப்பாக திபெத் உள்ளிட்ட நாடுகள் குறித்த தகவல்களையும் அறிந்துகொள்ள விரும்பினர்.
இதற்காக வட இந்தியாவைச் சேர்ந்த சிலருக்கு அவர்கள் பயிற்சி அளித்தனர். அவர்கள் ஆன்மிகவாதிகளாகவும், வர்த்தகர்களாவும் வேடமிட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நைன் சிங் ராவத்.
இவர் மிகத் துல்லியமாக திபெத் உள்ளிட்ட பகுதிகளை ஆராய்ச்சி செய்தார். 2ஆயிரம் அடிகளுக்கு ஒரு மைல் என்ற கணக்கில் ஆய்வு மேற்கொண்டார். 
திசைகாட்டி, பயண ஆவணங்கள் ஆகியவற்றை சங்கு போன்ற சில பொருள்களில் மறைத்து வைத்திருந்தார். திபெத்தில் உள்ள லாசா, சங்போ (இந்தியாவில் பிரம்மபுத்திரா என்றழைக்கப்படும் நதி) ஆகியவற்றை ஆய்வு செய்து வரைபடமாக்கினார். 
பிரம்மபுத்திரா, நேபாளம்-திபெத் இடையேயான வர்த்தகப் பாதை ஆகியவற்றையும் நைன் சிங் ஆய்வு செய்து வரைபடமாக்கினார். கடந்த 1873-ஆம் ஆண்டு காஷ்மீரின் லே பகுதியில் தொடங்கி, லாசா வழியாக அஸ்ஸாமுக்கு 1875-ஆம் ஆண்டு நைன் சிங் வந்து சேர்ந்தார். இதுவே அவர் மேற்கொண்ட கடைசி ஆராய்ச்சி பயணம் ஆகும். 1882-இல் இவர் காலமானார்.
நைன் சிங்குக்கு பாரீஸ் புவியியலாளர்கள் சொசைட்டி விருது வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இவரது உருவப்படம் பதித்த அஞ்சல் தலையை மத்திய அரசு கடந்த 2004-இல் வெளியிட்டு கௌரவித்துள்ளது.
அவர் மலைகளுக்கு நடுவே நின்று தொடுவானத்தை பார்ப்பது போன்ற ஓவியத்தை கூகுள் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்டு கௌரவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT