இந்தியா

பாஜக ஆளும் மாநிலங்களில் இடதுசாரிகள் யாத்திரை நடத்த முடியுமா?

DIN

பாஜக ஆளும் மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யாத்திரை மேற்கொள்ள முடியுமா? என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்எஸ்எஸ்-பாஜகவினர் மேற்கொண்ட யாத்திரைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி யாத்திரையை தொடங்கியுள்ளது.
"ஜன ஜாக்ரத யாத்திரை' என்ற பெயரிடப்பட்டுள்ள யாத்திரையை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது:
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எதிராக ஆர்எஸ்எஸ்-பாஜகவினர் நடைப்பயணம் மேற்கொண்டனர். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பல்வேறு மூத்த தலைவர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்றனர். கேரளத்தை கேலி செய்யும் வகையில் யாத்திரையில் அவர்கள் உரையாற்றினர். ஆனால், கேரள மக்களும், மாநில அரசும் மிகவும் அடக்கமாக இருந்தன. கடும் சினத்தை அவர்கள் எழுப்பியபோதும் நாம் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டோம். இதுவே நமது கலாசாரம். பாஜக மூத்த தலைவர்களின் கலாசாரம் அவர்களின் பேச்சு மூலம் தெரிந்துவிட்டது.
அவர்கள் யாத்திரை மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசு செய்து கொடுத்தது. உரிய பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதுபோன்று யாத்திரையை மேற்கொள்ள முடியுமா? ஒருவேளை அவ்வாறு மேற்கொண்டால் அதை அந்த மாநில அரசுகள் தடை செய்திருக்கும் அல்லது யாத்திரையின்போது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கும். சித்தாந்தம் சார்ந்த பேரணிகளை நாங்கள் எதிர்க்கவில்லை. உண்மையில், பாஜகவைக் கண்டு நாங்கள் அச்சம் கொள்ளவில்லை. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுகளே அக்கட்சிக்கு எதிரிகளாகிவிடும் என்றார் பினராயி விஜயன்.
"இந்த யாத்திரை மூலம் மதவாத சக்திகளுக்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்வோம். யாத்திரையில் உண்மைகளை தெரியப்படுத்துவோம்' என்று அந்த மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் கனம் ராஜேந்திரன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT