இந்தியா

விவசாயிகளின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள்: "இஃப்கோ' கூட்டுறவு நிறுவனத்துக்கு பிரதமர் பாராட்டு

DIN

விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனத்துக்கு (இஃப்கோ) பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
"இஃப்கோ'வின் பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி, அதன் மேலாண் இயக்குநர் யு.எஸ்.அவஸ்திக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
சரியான அளவில் உரங்களைப் பயன்படுத்துவது, நவீன் வேளாண் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்க, "இஃப்கோ' மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை அடைவதற்கு, மேற்கண்ட நடவடிக்கைகள் உதவும். விவசாயிகளின் வாழ்கைத் தரத்தை உயர்த்த, இஃப்கோவும், கூட்டுறவு அமைப்புகளும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மதிப்புமிக்கவை. வேம்பு கலந்த யூரியாவின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்திலும், இஃப்கோ முக்கியப் பங்காற்றி வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கடந்த 1967-ஆம் ஆண்டில் 57 கூட்டுறவு சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்ட இஃப்கோ கூட்டுறவு நிறுவனத்தில், தற்போது 36 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன. தற்போது பொன்விழா ஆண்டை கொண்டாடி வரும் இந்த கூட்டுறவு நிறுவனம், நாடு முழுவதும் 125 மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
இஃப்கோவுக்குச் சொந்தமாக இந்தியாவில் 5 உரத் தொழிற்சாலைகளும், வெளிநாடுகளில் 3 தொழிற்சாலைகளும் உள்ளன. கடந்த நிதியாண்டில் சுமார் 85 லட்சம் டன் உரங்களை உற்பத்தி செய்துள்ள இந்நிறுவனம், சுமார் 110 லட்சம் டன் உரங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் இஃப்கோவின் விற்றுமுதல் ரூ.22,500 கோடியாகும். உர வர்த்தகம் மட்டுமன்றி, கிராமப் புற சிறு தொழில்களுக்கு காப்பீடு வழங்கும் பணியிலும் இக்கூட்டுறவு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT