இந்தியா

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: லாலு பிரசாத்தின் மகளுக்குச் சொந்தமான தில்லி பண்ணை வீடு முடக்கம்

DIN


சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி, மருமகன் சைலேஷ் குமார் ஆகியோருக்குச் சொந்தமான தில்லி பண்ணை வீட்டை அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை முடக்கியது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
தில்லி பிஸ்வாசன் பகுதியில் மிசா பார்தி, சைலேஷ் குமார் ஆகியோருக்குச் சொந்தமான பண்ணை வீடு, 'மிஷெய்ல் பேக்கர்ஸ் அண்ட் பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் வாயிலாக அந்தச் சொத்து கடந்த 2008-09ஆம் ஆண்டில் ரூ.1.20 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது.
போலி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பான விவகாரத்தில், ஜெயின் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் சுரேந்திர குமார் ஜெயின், வீரேந்திர ஜெயின் உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இந்த பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை கடந்த ஜூலை மாதத்தில் சோதனை நடத்தியது. சுரேந்திர குமார் ஜெயின், வீரேந்திர ஜெயின் ஆகியோர் தொடர்பு வைத்திருந்த நிறுவனங்களில், மிஷெய்ல் பேக்கர்ஸ் அண்ட் பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக மிசா பார்தியும், சைலேஷ் குமாரும் முன்பு இருந்துள்ளனர். மிசா பார்தியால் இந்நிறுவனம் விலைக்கு வாங்கப்படும் வரையில், அந்நிறுவனத்தின் பதிவு முகவரியாக 'தில்லி, 25, துக்ளக் சாலை' என்பதுதான் இருந்தது. மிசா பார்தியும், சைலேஷ் குமாரும் அந்நிறுவனத்தின் இயக்குநர்களான பிறகு, அந்நிறுவனத்தின் பதிவு முகவரியானது, '26, பாலம் பண்ணை வீடு, விபிஒ பிஜ்வாசன், புது தில்லி' என்று கடந்த 2009-2010-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மாற்றப்பட்டது.
இந்த வழக்கில், மிசா பார்தி, சைலேஷ் குமாரிடம் அமலாக்கத் துறை முன்பு விசாரணை நடத்தி, அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து, அந்த பண்ணை வீட்டை அமலாக்கத் துறை தற்போது முடக்கியுள்ளது. 
ரூ.1.20 கோடி மதிப்புக்கு நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் முக்கிய சூத்திரதாரிகளாக ஜெயின் சகோதரர்களும், சிஏ அகர்வால், மிசா பார்தி, சைலேஷ் குமார் ஆகியோர் இருப்பதாக கருதுகிறோம் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரகுரு கல்லூரியில் விருது வழங்கும் விழா

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

SCROLL FOR NEXT