இந்தியா

ஆதாருக்கு அரசமைப்பு சட்ட அங்கீகாரம் கிடைக்கும்: அருண் ஜேட்லி நம்பிக்கை

DIN

ஆதார் அட்டை திட்டத்துக்கு அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் கிடைக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள தனிநபர் உரிமையைப் பறிக்கும் வகையில் ஆதார் திட்டம் செயல்படுகிறதா? என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் ஜேட்லி இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தில்லியில் ஐ.நா. சார்பில் புதன்கிழமை நடைபெற்ற அனைவருக்கும் நிதிச் சேவை தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற ஜேட்லி பேசியதாவது:
ஆதார் அட்டை திட்டம் கடந்த காங்கிரஸ் கூட்டணியில் அறிமுகப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால், அதற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தது பாஜக அரசுதான். அரசின் மானியங்கள் உரிய பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய ஆதார் எண் மிகவும் உதவிகரமாக உள்ளது.
ஆதாருக்காக பெறப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், தனிநபர் உரிமையைப் பாதுகாக்கவும் சட்டத்தின் மூலம் இரும்புச் சுவரை மத்திய அரசு அமைத்துள்ளது. எனவே, அரசமைப்புச் சட்டப்படி ஆதாருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். 
உச்ச நீதிமன்றத்தின் 9 நபர்கள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு அண்மையில், நாட்டின் குடிமக்களின் தனிப்பட்ட உரிமை குறித்து தீர்ப்பளித்தது. அவர்கள் சட்டத்தின்படி இந்த விஷயத்தை அணுகியுள்ளனர். அதே நேரத்தில், தேசப் பாதுகாப்பு, குற்றங்களைக் கண்டறிவது, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்துவது ஆகியவற்றில் தனியுரிமை பெரிய பிரச்னையாக இருக்கக் கூடாது.
ஒரு முறையான அடையாளம் காணும் முறையை உருவாக்குவதன் மூலம்தான் அரசின் சமூகநலத் திட்டங்கள் உரிய நபர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய முடியும். இல்லையென்றால் அரசு நிதி பெருமளவில் வீணாகும். இதனால் தேசத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் 42 சதவீத குடும்பங்களில் யாருக்கும் வங்கிக் கணக்கு இல்லாத நிலை இருந்தது. அதன் பிறகு மத்திய அரசு கொண்டு வந்த ஜன் தன் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் சுமார் 30 கோடி குடும்பங்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் வங்கியின் நிதிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு 77 சதவீத வங்கிக் கணக்குகள் பணமின்றியும், பராமரிக்கப்படாமலும் இருந்தன. இப்போது, அரசின் பல்வேறு மானியங்களை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த தொடங்கிய பிறகு, 20 சதவீத வங்கிக் கணக்குகள்தான் பணமின்றி உள்ளன. குறைந்தபட்சம் குடும்பத்தில் ஒருவருக்காவது வங்கிக் கணக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அருண் ஜேட்லி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT