இந்தியா

இந்திய விமானப் படை முன்னாள் தலைமைத் தளபதி அர்ஜன் சிங் காலமானார்

DIN

இந்திய விமானப் படையின் முன்னாள் தலைமைத் தளபதியும், கடந்த 1965-ஆம் ஆண்டு போரில் தீரத்துடன் செயல்பட்டு, பாகிஸ்தான் படையினரை பின்வாங்கச் செய்த பெருமைக்கு உரியவருமான அர்ஜன் சிங் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 98. 
இதுதொடர்பாக விமானப் படை வட்டாரங்கள் கூறுகையில், "அர்ஜன் சிங்குக்கு, சனிக்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி இரவு 7.30 மணியளவில் அவர் காலமானார்' என்று தெரிவித்தன.
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்: இந்திய விமானப் படையின் மிக உயரிய பதவியான "விமானப் படை மார்ஷல்' பதவியை அலங்கரித்தவரான அர்ஜன் சிங்கின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராம்நாத் கோவிந்த் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "அர்ஜன் சிங்கின் மறைவு, வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 1965-ஆம் ஆண்டு போரில் அவர் ஆற்றிய பங்களிப்புக்கு, இந்தியாவே அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "அர்ஜன் சிங்கின் மறைவு, துரதிருஷ்டவசமானது. நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவையை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - பாகிஸ்தான் போரின்போது, ஜம்முவில் உள்ள முக்கிய நகரமான அக்னூரைக் கைப்பற்ற "ஆபரேஷன் கிராண்ட் ஸ்லாம்' என்ற நடவடிக்கையை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டது. அப்போது, இளம் இந்திய விமானப் படை வீரர்களை தீரத்துடனும், திறனுடனும் வழிநடத்திய அர்ஜன் சிங், பாகிஸ்தான் படையினரை பின்வாங்கச் செய்தார். இதன் காரணமாக, பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இந்தப் பெருமைக்கு உரியவரான அர்ஜன் சிங்குக்கு, இந்திய விமானப் படையிலேயே உயர் பதவியான "விமானப் படை மார்ஷல்' பதவி கடந்த 2002-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது, ராணுவத்தின் "ஃபீல்டு மார்ஷல்' பதவிக்கு நிகரானதாகும். இந்திய விமானப் படையில் 5 நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட ஒரே அதிகாரியும், அர்ஜன் சிங்தான்.
கடந்த 1964 முதல் 1969, ஜூலை 15-ஆம் தேதி வரை விமானப் படை தலைமை தளபதியாக பதவி வகித்த இவர், பின்னர் ஸ்விட்சர்லாந்து மற்றும் வாடிகனுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றினார். அதன்பிறகு, கென்யாவுக்கான இந்திய தூதராக பணியாற்றினார்.
தில்லி துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ள அர்ஜன் சிங்கை, கௌரவிக்கும் வகையில் மேற்கு வங்கத்திலுள்ள விமானப் படை தளத்துக்கு கடந்த ஆண்டு அவரது பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT