இந்தியா

சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு குறைந்தால் கட்டணம்: மறுபரிசீலனை செய்ய பாரத ஸ்டேட் வங்கி முடிவு

DIN

சேமிப்புக் கணக்குகளில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகையை இருப்பு வைத்திராத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்களை மறுபரிசீலனை செய்ய பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் தேசிய வங்கியியல் பிரிவுத் தலைவர் ரஜனீஷ் குமார் கூறியதாவது:
எங்களது வங்கிச் சேவைகள் குறித்து வாடிக்கையாளர்களிடமிருந்து பல்வேறு கருத்துகளையும், ஆலோசனைகளையும் நாங்கள் கேட்டுப் பெற்றுள்ளோம்.
குறிப்பாக, சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைத்திராத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து வங்கி நிர்வாகம் பரிசீலனை செய்து, அதற்கான முடிவுகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும். முதல்கட்டமாக, மூத்த குடிமக்கள், மாணவர்கள் போன்ற பிரிவினருக்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கலாமா? என்பது குறித்து நிர்வாக அளவில் விவாதிக்கப்படும்.
தற்போது எங்களிடம் 40 கோடிக்கும் மேலானவர்கள் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். அவற்றில் 13 கோடி கணக்குகள் அடிப்படை சேமிப்புக் கணக்குகள் மற்றும் ஜன் தன் வங்கிக் கணக்குகள் ஆகும் என்றார் அவர்.
பெருநகரங்களில் உள்ள கிளைகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது கணக்கில் மாதாந்திர சராசரி குறைந்தபட்ச தொகையாக ரூ.5,000 வைத்திருக்க வேண்டும் எனவும், கிராமப்புறப் பகுதிகளில் மாதாந்திர சராசரியாக ரூ.1,000 வைத்திருக்க வேண்டும் எனவும் பாரத ஸ்டேட் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.
அவ்வாறு குறைந்தபட்ச தொகையில் 75 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பு வைத்திருப்பவர்களுக்கு ரூ.100 (ஜிஎஸ்டி கட்டணம் தனி), 50 சதவீதத்துக்கும் குறைவாக வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக ரூ.50 (ஜிஎஸ்டி கட்டணம் தனி) கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கட்டணங்கள் முறையே ரூ.20 மற்றும் ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை சேமிப்புக் கணக்குகள், ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கு இந்தக் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT