இந்தியா

ரயில்வே ஹோட்டல் முறைகேடு வழக்கு: ராப்ரி தேவிக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்

DIN

இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான ஹோட்டல்களை தனியார் நிறுவனத்துக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒதுக்கீடு செய்ததாகப் பதிவு செய்ப்பட்டுள்ள வழக்கில், பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மனைவியுமான ராப்ரி தேவிக்கு அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கெனவே ஒரு முறை ராப்ரி தேவிக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. எனினும், அவர் விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை.
இந்நிலையில், வரும் 26-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அவருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ரயில்வே துறை அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தார். அப்போது, ஒடிஸா மாநிலத்தின் புரி, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி ஆகிய நகரங்களில் ரயில்வேவுக்குச் சொந்தமான 2 ஹோட்டல்களை ஒப்பந்த அடிப்படையில் நிர்வகிப்பதற்காக சுஜாதா ஹோட்டலிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு அனுமதி அளிக்க சர்லா குரூப் என்ற பினாமி நிறுவனம் மூலம் பிகார் மாநிலம், பாட்னாவில் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு பிரசாத்துக்கு எதிராகப் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் அவருக்கு எதிராகவும், ராப்ரி தேவி, அவர்களது மகன் தேஜஸ்வி யாதவ், சுஜாதா ஹோட்டலின் இயக்குநர்கள் விஜய் கோச்சர், வினய் கோச்சர், அப்போதைய ரயில்வே மேலாண் இயக்கநர் பி.கே.கோயல் ஆகியோருக்கு எதிராகவும் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அத்துடன், லாலு பிரசாத் உள்ளிட்டோருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையையும் நடத்தியது.
கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT