இந்தியா

தொடரும் கனமழை: மும்பையில் இயல்பு வாழ்க்கை முடக்கம்

DIN

மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் கனமழை பெய்ததால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மும்பையில் உள்ள பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
சாலைகளில் மழை நீர் நிரம்பியுள்ளதால் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. மேலும், வெள்ளம் காரணமாக நகரின் முக்கியப் பகுதிகளிலிருந்து சில தேசிய நெடுஞ்சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், இருப்புப் பாதைகளையும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மும்பை ரயில் நிலையத்திலும், புறநகர் ரயில் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் முடங்கியுள்ளனர்.
இதனிடையே, அலுவலகவாசிகளுக்கு வீட்டு சாப்பாடு எடுத்துச் செல்லும் 'டப்பாவாலாக்களும்' மழை காரணமாக தங்கள் பணிகளை மேற்கொள்ள முடியதாததால் ஏராளமானோர் சிரமத்துக்குள்ளாயினர்.
பெருமழை காரணமாக, மும்பையில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையில் மட்டும் மும்பையில் 225.3 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. சராசரியாக 204.5 மில்லிமீட்டர் அளவு என்பது கனமழையாக கருதப்படும் நிலையில், இந்த அளவு மிகவும் அதிகமாகும்.
இதனிடையே, மும்பையில் மேலும் இரண்டு நாள்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 29-ஆம் தேதி மும்பையில் பெய்த மழையால் நகரமே ஸ்தம்பித்து போனது. இதன் பாதிப்பிலிருந்து மும்பை மக்கள் சற்றே மீண்டுள்ள நிலையில், அங்கு திரும்பவும் பலத்த மழை பெய்யத் தொடங்கியிருப்பது மக்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.
விமானப் போக்குவரத்து பாதிப்பு: கனமழை காரணமாக மும்பையில் விமானப் போக்குவரத்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் முடங்கியது. மும்பை சத்ரபதி விமான நிலையத்துக்கு 183 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு தரையிறங்கிய 'ஸ்பைஸ் ஜெட்' விமானம் மழை நீரில் வழுக்கியதால் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றது. பின்னர், மணலில் சிக்கிக்கொண்ட அந்த விமானத்திலிருந்து அனைத்து பயணிகளுக்கு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து, புதன்கிழமை காலை முதலாக, சத்ரபதி விமான நிலையத்துக்கு வந்த 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT