இந்தியா

மத்திய அரசில் ஊழல் என்பதே இல்லை: அருண் ஜேட்லி

மத்திய அரசில் ஊழல் என்பது கடந்த கால விஷயமாகிவிட்டது; மாநில அரசுகளில் ஊழல் வேகமாக மறைந்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

DIN

மத்திய அரசில் ஊழல் என்பது கடந்த கால விஷயமாகிவிட்டது; மாநில அரசுகளில் ஊழல் வேகமாக மறைந்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆவது இந்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது:
சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதானாலும் சரி, மானியங்களை ஒழுங்குபடுத்துவதானாலும் சரி இப்போது மத்திய அரசு விரைவாக முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் கருப்புப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவது, பினாமி பெயரில் சொத்துகளைக் குவிப்பதும் இனிமேல் சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரொக்கமாகப் பணத்தைக் கையாளுவது கூட இனி எளிதான விஷயமல்ல.
ஜிஎஸ்டி வரிக் கணக்கை தாக்கல் செய்பவர்கள் அதற்கான கடைசி தினத்துக்கு 5 நாள்களுக்கு முன்னதாகவே வரிக் கணக்கை தாக்கல் செய்வதன் மூலம் கடைசி கட்ட நெருக்கடியை தவிர்க்க முடியும். மத்திய அரசில் ஊழல் என்பது கடந்த காலமாகிவிட்டது. மாநில அரசுகளில் ஊழல் வேகமாக மறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மிகுந்த நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா மாறி வருகிறது. ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். மின்னணு முறைப் பணப்பரிமாற்றம், புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது ஆகியவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளோம். 
மேலும், பல துறைகளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டியுள்ளது. மனை வணிகம், கட்டுமானத் துறையில் ஜிஎஸ்டி-யை கொண்டுவருவது எளிதாக இருக்கும்.
பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அது தொடர்பான உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஏர் இந்தியாவை தனியார்மயமாக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. 
பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதில் மத்திய அரசுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இப்போது பொருளாதார நிலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. எனவே, சரியான நேரத்துக்காக காத்திருக்கிறோம்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது என சில மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன. மாநில அரசுகள் அவர்களின் நிதி ஆதாரத்தில் இருந்துதான் இதற்கான செலவை ஈடுகட்ட வேண்டும் என்றார் அருண் ஜேட்லி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT