இந்தியா

சுனந்தா புஷ்கர் வழக்கு: ஹோட்டல் அறையை திறக்காததற்கு நீதிமன்றம் கடும் கண்டனம்

DIN

சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகக் கூறப்படும் ஹோட்டல் அறையை திறக்காததற்காக, போலீஸாருக்கு தில்லி பெருநகர நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர், தில்லியில் உள்ள 'லீலா பேலஸ்' என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை முதலில் ஒரு தற்கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்தனர்.
பின்னர், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டது. அதில், சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது அல்ல என்றும், அவர் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக தில்லி காவல்துறை பல்வேறு தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, இந்த வழக்கை விசாரித்து வரும் தில்லி பெருநகர நீதிமன்றத்தில், லீலா பேலஸ் ஹோட்டல் நிர்வாகம் சார்பில் கடந்த ஜூலை மாதம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்த ஹோட்டல் அறை கடந்த மூன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருப்பதால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, அந்த அறையை திறக்க போலீஸாருக்கு உத்தரவிடுமாறும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தில்லி பெருநகர நீதிமன்றம், சம்பந்தப்பட்ட ஹோட்டல் அறையில் இருக்கும் பொருள்களை (விசாரணைக்கு தேவையானவை) எடுத்துவிட்டு அந்த அறையை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை போலீஸார் செயல்படுத்தவில்லை.
இதனைத் தொடர்ந்து, அந்த ஹோட்டல் அறையை திறக்குமாறு போலீஸாருக்கு பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவை தில்லி போலீஸார் தட்டிக் கழித்து வந்தனர். கடைசியாக, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 12-ஆம் தேதி நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதில், ஹோட்டல் அறை செப்டம்பர் 26-ஆம் தேதி (இன்று) திறக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவையும் போலீஸார் அமல்படுத்தவில்லை.
இதையடுத்து, இந்த வழக்கு, தில்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் சிங் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான தில்லி காவல் துணை ஆணையர், தடயவியல் சோதனை அறிக்கைக்காக காத்துக் கொண்டிருப்பதாலேயே ஹோட்டல் அறையை திறக்க தாமதமாவதாக கூறினார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த தவறியமைக்காக போலீஸாருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படை கூட உங்களுக்கு (தில்லி காவல்துறை) தெரியாதா? நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாமல், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள விரும்புகிறீர்களா? இந்த விவகாரம் தொடர்பாக தில்லி காவல் இணை ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT