இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முதுகெலும்பு உடைந்துவிட்டது: பயங்கரவாத ஒழிப்புப் படைத் தலைவர் பேட்டி

DIN

காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது; அரசியல்ரீதியாக பிரச்னைக்குத் தீர்வு காணவும் வழி ஏற்பட்டுள்ளது என்று மேஜர் ஜெனரல் பி.எஸ்.ராஜு கூறியுள்ளார். காஷ்மீரில் உள்ள 5 மாவட்டங்களில் பயங்கரவாதிகள் ஒழிப்புப் படையின் தலைவரான அவர், பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டவர்கள் இப்போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முதுகெலும்பை ராணுவம் உடைத்துவிட்டது. அரசியல்ரீதியாகப் பேச்சு நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வுகாண வழி ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட இளைஞர்களை யாரும் தூண்டாமல் கண்காணிப்பது மட்டுமே இப்போது ராணுவத்தின் முக்கியப் பணியாக உள்ளது.
இது தொடர்பாக கல்லூரி, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காஷ்மீர் மக்கள் அனைவரும் அமைதியான வழியில் தங்கள் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். வன்முறையில் இருந்து விடுபட வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசை. 
பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமுள்ள தெற்கு காஷ்மீரில் இந்த ஆண்டு இதுவரை 73 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டனர். அதிகபட்சமாக இன்னும் 150 பயங்கரவாதிகள் வேண்டுமானால் உயிருடன் இருக்கலாம். அவர்கள் இப்போது ராணுவத்தினரைக் குறிவைப்பதைக் கைவிட்டுவிட்டனர். ராணுவத்துக்கு தகவல் தெரிவிப்பதாகச் சந்தேகித்து அப்பாவிகளை கொன்று வருகின்றனர்.
கல்லூரி மாணவர்களையும், பள்ளிச் சிறார்களையும் ராணுவத்துக்கு எதிராக கல்வீசும்படி சில அமைப்புகள் தூண்டிவிட்டு வரும் ராணுவத்துக்கும், அரசுக்கும் பெரும் பிரச்னையாக உள்ளது. சில நேரங்களில் 8 வயது சிறார்கள் கூட கற்களை வீசுகின்றனர். அவர்கள், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் இதில் ஈடுபடுகின்றனர். அவர்கள் ராணுவத்திடம் பிடிபட்டாலும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வீட்டுக்குத் திருப்பி அனுப்பிவைக்கிறோம்.
இதுபோன்ற சிறார்களை நல்வழிப்படுத்த ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக சிறார்களுக்கான விளையாட்டு, ஓவியப் போட்டி உள்ளிட்டவற்றை நடத்தி ராணுவம் சார்பில் பரிசுகளை வழங்கி வருகிறோம். காஷ்மீர் மக்கள் இந்தியாவில் இருந்து விடுதலை பெற விரும்பவில்லை. ராணுவம் இங்கு இருக்கக் கூடாது என்றுதான் நினைக்கிறார்கள் என்று கூறப்படுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், மக்களின் பாதுகாப்புக்காகவே ராணுவம் காஷ்மீரில் உள்ளது என்பதை உணர வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT