அனைத்து நீர் நிலைகளை மத்திய அரசு பராமரிக்கக் கோரும் மனு தள்ளுபடி
நாட்டிலுள்ள அனைத்து நீர் நிலைகளையும் மத்திய அரசு பராமரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாட்டிலுள்ள அனைத்து நீர் நிலைகளையும் மத்திய அரசு பராமரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு பொது நல வழக்காடு மன்றத்தின் கே.கே. ரமேஷ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'ஆறுகள் போன்ற அனைத்து நீர் நிலைகளும், அணைகளின் நிர்வாகம், இயக்கம், கட்டுப்பாடு, பராமரிப்பு ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்குமாறு மாற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜெய் சுகின் ஆஜராகி, 'நாட்டிலுள்ள ஆறுகள் போன்ற அனைத்து நீர் நிலைகளையும், அணைகளையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்குமாறு மாநிலங்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் நீர் தொடர்பான பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்' என்றார்.
இதற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, 'ஓர் அணை, ஒரு நதி ஆகியவை பெரிய பிரச்னையை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற உத்தரவை எப்படி பிறப்பிக்க முடியும்? எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றார்.