முகப்பு
இந்தியா

13 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி

மகாராஷ்டிரத்தில் பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த 13 வயது சிறுமியின் 24 வார கால கருவை கலைப்பதற்கு, மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 1:05 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த 13 வயது சிறுமியின் 24 வார கால கருவை கலைப்பதற்கு, மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மும்பை அருகேயுள்ள உல்ஹாஸ்நகரைச் சேர்ந்த அந்த சிறுமியை, 23 வயது நபர் ஒருவர் கடந்த ஆண்டு ஜூலையில் கடத்திச் சென்றார். பின்னர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அந்த நபரை கடந்த மாதம் கைது செய்த காவல்துறையினர், சிறுமியை மீட்டனர். அப்போது, சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தியபோது, அவர் 24 வார கால கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. 
மருத்துவரீதியிலான கருகலைப்புச் சட்டத்தின்படி, 20 வாரங்களுக்கு மேலான கருவைக் கலைப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் அனுமதி அவசியமாகும். இதையடுத்து, சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் அவரது குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறுமியிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, அறிக்கை அளிக்கும்படி, மும்பையிலுள்ள ஜே.ஜே. மருத்துவமனைக்கு உத்தரவிட்டது. அதன்படி, நீதிபதிகள் என்.ஹெச்.பாட்டீல், அனுஜா பிரபுதேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், சிறுமியின் கர்ப்பத்தை கலைக்காவிட்டால், அவரது உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதித்த நீதிபதிகள், ஜே.ஜே.மருத்துவமனையில் அவரை செவ்வாய்க்கிழமை அனுமதிக்கும்படி அறிவுறுத்தினர்.
மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறையினரின் மெத்தனப் போக்கால் சுமார் ஒரு மாத காலம் வீணாகிவிட்டதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற வழக்குகளை கையாளும் முறை குறித்து மாநில அரசின் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதா? என்று கேள்வியெழுப்பினர். இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்க மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.