முகப்பு
இந்தியா

குருவாயூர் கோயில் அன்னதானக் கூடம்: அனைத்து மதத்தினருக்கும் அனுமதி

கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலின் அன்னதானக் கூடத்துக்குச் செல்ல ஹிந்துக்கள் அல்லாதோருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:16 am IST
பகிர்:

கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலின் அன்னதானக் கூடத்துக்குச் செல்ல ஹிந்துக்கள் அல்லாதோருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலுக்குள் ஹிந்துக்கள் அல்லாதோர் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த அன்னதானக் கூடத்துக்கு அனைத்து மதத்தினரும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கு சட்டை, பேன்ட், காலணி ஆகியவற்றை அணிந்துகொண்டு செல்ல முன்பு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளையும் குருவாயூர் தேவஸ்வம் அலுவலகம் நீக்கியுள்ளது. இந்தத் தகவலை தேவஸ்வம் தலைவர் கே.பி.மோகன்தாஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இதுதொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை கலந்தாலோசனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட்டது. ஹிந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை என்று அன்னதானக் கூடத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பலகையையும் அப்புறப்படுத்திவிட்டோம்.
கடந்த காலங்களில் அன்னதானக் கூடம் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அது கோயிலுக்கு வெளியே மேற்கு பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டது என்று மோகன்தாஸ் தெரிவித்தார்.
பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸை குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அண்மையில் ஒரு பிரிவினர் கோரிக்கை விடுத்தனர். மற்றொரு சாரார் ஹிந்துக்கள் அல்லாதோரை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறி வருகின்றனர்.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ், குருவாயூர் கிருஷ்ணரை போற்றி நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். குருவாயூரப்பனை தரிசிக்க வேண்டும் என்று அவர் பல முறை தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.