முகப்பு
இந்தியா

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி தாஹிர் மெர்சென்ட் மரணம்

மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பான வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாஹிர் மெர்சென்ட்,

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:23 am IST
பகிர்:

மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பான வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாஹிர் மெர்சென்ட், புணே மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
மும்பையின் பல்வேறு இடங்களில் கடந்த 1993ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர்குண்டுவெடிப்புகளில் அப்பாவி மக்கள் உள்ளிட்ட 257 பேர் பலியாகினர். 713 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்த நிதி அளித்து உதவியதாக தாஹிர் மெர்சென்ட்டுக்கு எதிராக 
குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தடா சிறப்பு நீதிமன்றம், தாஹிர் மெர்சென்ட், பிரோஸ் கான் ஆகியோருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது. அபு சலீம், கரிமுல்லா கான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. 
அப்போது அபுதாபியில் தாஹிர் பதுங்கியிருந்தார். இதுகுறித்து சிபிஐ அளித்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, தாஹிரை கைது செய்து இந்தியாவிடம் அபுதாவி ஒப்படத்தது. இதைத் தொடர்ந்து, புணேயில் உள்ள ஏரவாடா சிறையில் தாஹிர் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தாஹிருக்கு செவ்வாய்க்கிழமை இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, புணேயில் உள்ள சாசூன் மருத்துவமனையில் அவர் அதிகாலை 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தாஹிருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, அவர் உயிரிழந்தார்.
இந்தத் தகவலை மகாராஷ்டிர சிறைத் துறை கூடுதல் இயக்குநர் பூஷண்குமார் உபாத்யாய தெரிவித்தார்.
முன்னதாக, மும்பைத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த இன்னொரு நபரான முஸ்தபா தோஸா, மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.