இந்தியா

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: அனுமதி அளித்த அன்றைய தினமே இப்படியா?

ENS


புது தில்லி: சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை வழங்கும் வகையில் அவசரச் சட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட அன்றைய தினமே சுமார் 10க்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன.

பன்னிரெண்டு வயது வரையிலான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, இந்த அவசரச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. 

இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்த நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தச் சட்டத்துக்கு அவர் உடனடியாக கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.

இதுதொடர்பாக, வெளியிடப்பட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தற்போது நடைபெறவில்லை. இந்தச் சூழலில், சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, இந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு குடியரசுத் தலைவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த அவசரச் சட்டத்துக்கு அவர் ஒப்புதல் அளித்தார் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசரச் சட்டத்தின்படி, சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு இனி அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். பாலியல் பலாத்கார சம்பவங்களை விசாரிப்பதற்காக, மாநில அரசுகள், உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் ஆலோசனையுடன் புதிதாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இதேபோல், ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு தடயவியல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்.

காலக்கெடு விதிப்பு: சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் விரைவில் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதாவது, அனைத்து பாலியல் பலாத்கார சம்பவங்களிலும் 2 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட வேண்டும். இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளில் 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என புதிய அவசரச் சட்டம் பரிந்துரை செய்கிறது.

முன்ஜாமீன் கிடையாது: 16 வயது வரையிலான சிறுமிகளை பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் நபர்கள் முன்ஜாமீன் கோர முடியாது. அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த அன்றைய தினமே, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக 10க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் உத்தரப்பிரதேசமே பெரும் பங்கை எடுத்துக் கொண்டது. அதன்படி, யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தில் 4 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் உன்னாவ் பகுதியில் 15 வயது சிறுமி தனது தந்தை உட்பட 5 பேரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதும் ஒன்று. இந்த சம்பவம் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி நடந்த போதும், இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமைதான் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு 2 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே போல, முசாஃபர்நகரில் 13 வயது சிறுமியை, மருத்துவர் ஒருவர் கடத்திச் சென்று தனது கிளினிக்கில் 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒடிசாவில் 6 வயது மற்றும் 4 வயது சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், பிகாரில் சிறுமி பலாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் வழக்குகள் பதிவாகியுள்ளன. பிகாரில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 3வது சம்பவம் இதுவாகும்.

ஹரியாணாவில் 14 வயது சிறுமி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது நான்கு பேரால் கடத்திச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இதே போல, நெல்லூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக பொறியியல் மாணவர் கைது செய்யப்பட்டார். 

தமிழகத்தில் நேற்று மட்டும் 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. மார்த்தாண்டம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தமிழகக் காவல்துறையினருக்கு புகார் வந்துள்ள நிலையில், கோவையில் ஓடும் ரயிலில் 7 வயது சிறுமியை துன்புறுத்தியதாக வழக்குரைஞர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட அன்றைய தினமே, இதுபோன்று 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது, அவசரச் சட்டத்தின் அவசரம் மற்றும் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT