இந்தியா

திருமண பரிசுப் பொருள் வெடித்து மணமகன், பாட்டி மரணம்: பழிக்கு பழி வாங்க வெடிகுண்டு வைத்த ஆசிரியர் கைது

ENS


புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டத்தில் திருமணத்தின் போது பரிசு பொருளில் வெடிகுண்டை மறைத்து வைத்து மணமகனும், அவரது பாட்டியும் உயிரிழக்கக் காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிப்ரவரி மாதம் நடந்த இந்தப் படுகொலை சம்பவத்தில் மிக மிக சாமர்த்தியமாக துப்புத் துலக்கி, குற்றவாளியான ஆங்கில ஆசிரியரை சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம், பொலிங்கர் மாவட்டம் பட்நாகர் நகரை சேர்ந்த சவுமியா சேகர் சாஹூ. இவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் பிப்ரவரி 18-ஆம் தேதி திருமணமும், பிப்ரவரி 21ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இதில் புதுமண தம்பதியினருக்கு நண்பர்கள், உறவினர்கள் என பலரும் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை உறவினர்களுடன் சேர்ந்து புதுமண தம்பதியினர் பிரித்து பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பரிசு பொருள் யாரும் எதிர்பாராத விதத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. 

இதில், புது மாப்பிள்ளையின் பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புது மாப்பிள்ளை சேகர் சாஹூ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மணமகள் ரீமா சாஹூ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்நாகர் போலீஸார், பரிசு பொருளில் வெடிகுண்டு வைத்தவர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

முதற்கட்ட விசாரணையில் குற்றவாளி குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், வழக்கு கிரைம் பிராஞ்சின் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது.

விசாரணையை திசை திருப்ப, குற்றவாளி ஒரு மிரட்டல் மின்னஞ்சலையும் அனுப்பியிருந்தார். அது விசாரணை அதிகாரிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

சின்ன சின்ன முடிச்சுகளை மிக லாவகமாக அவிழ்த்த விசாரணை அதிகாரிகளின் அதீத திறமையால் வழக்கு விசாரணை வேகம் எடுத்தது. பல புரியாத கேள்விகளுக்கு கிரைம் பிராஞ்ச் அதிகாரிகள் மாற்றி யோசி பாணியில் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணை வட்டத்துக்குள் வந்தவர் ஜோதி விகாஷ் ஜூனியர் கல்லூரியின் ஆங்கில ஆசிரியர் புஞ்ஜிலால் மெஹெர்.
 

Punjilal Meher

அவரைப் பற்றிய முதல்  அறிமுகமே, அவரது குற்றப்பின்னணிகளை விசாரணை அதிகாரிகளுக்கு தெளிவாக விளக்கியது.  நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பைபசுதா என்பவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் புஞ்ஜிலால் மீதான குற்றம் நிரூபணமானது. இந்த வழக்கில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த பைபசுதாவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வெடிகுண்டு பார்சலை அனுப்பிய கொரியர் நிறுவனத்திடம் விசாரணை நடத்திய போது, கொரியர் எடுத்தவரும், பார்சலை கொண்டு வந்து சேர்த்தவரும்  இந்த சதியில் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து குற்றவாளியை கண்காணித்து வந்த அதிகாரிகள் நேற்று அவரை கைது செய்தனர். குற்றத்தை ஒப்புக் கொள்ள முதலில் மறுத்த புஞ்ஜிலால், பிறகு அனைத்து ஆதாரங்களையும் காட்டிய பிறகு தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

அதில், யாரோ ஒருவர் அனுப்பச் சொல்லியே மிரட்டல் கடிதத்தை அனுப்பியதாக புஞ்ஜிலால் கூறிய போது, அந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பிய அன்றைய தினமே, அந்த எம்எஸ் வோர்ட் டாக்குமெண்டை தனது கணினியில் இருந்து டெலிட் செய்ததற்கான ஆதாரத்தை அதிகாரிகள் காட்டிய போது புஞ்ஜிலால் ஆடிப்போய்விட்டார்.

இந்த படுபாதக செயலுக்குப் பின்னால் இருந்த காரணம் இதுதான். சுமார் 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி ஒன்றின் பிரின்சிபலாக  புஞ்ஜிலால் இருந்துள்ளார். அப்போது சில புகார்கள் எழுந்ததால், அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, சஞ்சுக்தா அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.  (சஞ்சுக்தாவின் மகன்தான் வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்த புது மாப்பிள்ளை சௌமியா சேகர் சாஹூ.)இந்த காரணத்தால், தான் சஞ்சுக்தா மற்றும் அவரது குடும்பத்தை பழிவாங்க இந்த வெடிகுண்டு பார்சலை அனுப்பியுள்ளார் புஞ்ஜிலால்.

வெடிகுண்டு பார்சலை கொரியரில் அனுப்பிய குற்றவாளி, திருமணத்துக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியதோடு, வெடிகுண்டு வெடித்த சம்பவத்துக்குப் பிறகு அவர்களது வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குச் சென்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT