இந்தியா

மாவட்ட ரீதியாக வளர்ச்சியை ஏற்படுத்த மோடி அரசு முயற்சி

DIN


நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக முக்கியத்துவம் கொடுத்து அங்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பணியாற்றி வருகிறது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
கோவா மாநிலம் பனாஜியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (அசோசேம்) கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள தொழில்கள், வளங்கள், வேளாண்மை, கைத்தொழிலைப் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தத் திட்டமிட்டு மத்திய அரசு பணியாற்றி வருகிறது. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 முதல் 4 சதவீத பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தினால், அது ஒட்டுமொத்தத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
முக்கியமாக வேளாண்மைத் துறை சார்ந்த உணவுப் பதப்படுத்துதல், வேளாண் உற்பத்திப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த துறைகளில் நபார்டு வங்கி மத்திய அரசுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றி வருகிறது. உணவுப் பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த பிகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஹிமாசலப் பிரதேசம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் சில மாவட்டங்களைத் தேர்வு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதவிர அனைத்து மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிதாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. பெரும்பாலான முதல்வர்கள் இதற்கு சாதகமாக பதிலளித்துள்ளனர். நாட்டை பொருளாதாரரீதியாக மிகப்பெரிய மாற்றத்துக்கு எடுத்துச் செல்வதில் மத்திய அரசு முழுவீச்சில் பணியாற்றி வருகிறது என்றார் சுரேஷ் பிரபு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT