இந்தியா

ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கு: நாளை தீர்ப்பு

DIN


ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை வழங்கவுள்ளது. 

இந்திய விமானப் படைக்காக, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூ.58,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. 
ரஃபேல் விமானங்களுக்கு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பேசப்பட்ட விலையை விட அதிக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும்; விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இதனிடையே, ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது நடைபெற்ற விசாரணையின்போது, ரஃபேல் விமானம் தொடர்பான விவரங்களை, மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து சமர்ப்பிக்கும்படி, மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, அந்த விமானத்தின் விலை விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை, மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்தது.

அதன்பிறகு நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜரானார். அவர், 

"நமது நாட்டுக்காக கொள்முதல் செய்யப்பட வேண்டிய போர் விமானங்கள், ஆயுதங்களின் ரகம் குறித்து முடிவெடுக்க வேண்டியது துறைசார் நிபுணர்கள்தான். மாறாக, நீதிமன்றம் அல்ல.

ரஃபேல் விமானத்தில் விலை குறித்த முழு விவரமும் நாடாளுமன்றத்துக்கு கூட தெரிவிக்கப்படவில்லை. முந்தைய ஆட்சியில் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்ட ரஃபேல் விமானங்கள், தேவையான ஆயுதக் கட்டமைப்புகளை கொண்டவையாக இல்லை. தற்போது கொள்முதல் செய்யப்படும் விமானங்கள், அத்தகைய வசதிகளுடன் கூடியவை. எனவே, விமானத்தின் விலை உள்பட முழு விவரங்களையும் பகிரங்கமாக வெளியிடுவது, நமது எதிரி நாடுகளுக்கு சாதகமாக அமையக் கூடும்.

மேலும், இது இந்தியா-பிரான்ஸ் இடையிலான ஒப்பந்த விதிமுறைகளையும், அதிலுள்ள ரகசிய காப்பு அம்சத்தையும் மீறுவது போலாகும்" என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் கூறுகையில், "ரஃபேல் ஒப்பந்தம் குறித்த உண்மைகளை பொதுவெளியில் வெளியிடாமல், அந்த விமானத்தின் விலை தொடர்பான விவாதத்தை முன்னெடுக்க முடியாது. எனவே, விலை விவரத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டுமா? என்பது குறித்த முடிவை நாங்கள் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்றனர்.

மேலும், இது விமானப் படையின் தேவை தொடர்புடைய விவகாரம் என்பதால், அப்படையின் உயரதிகாரியிடம் விசாரணை நடத்த விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, விமானப் படை துணை தளபதி வி.ஆர்.சௌதரி உள்பட உயரதிகாரிகள் ஆஜராகினர். அவர்களிடம், விமானப் படையில் கடைசியாக போர் விமானங்கள் எப்போது இணைக்கப்பட்டன? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, நீதிபதிகள் பதில் பெற்றனர். அப்போது, 4-ஆவது, 5-ஆவது தலைமுறை போர் விமானங்கள் விமானப் படையிடம் இல்லை என்ற தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையடுத்து, மேற்கண்ட மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT