இந்தியா

நிதி மோசடியாளர் விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு சிஐசி பிறப்பித்த உத்தரவுக்கு  இடைக்காலத் தடை

DIN

வேண்டுமென்றே கடனைத் திருப்பி செலுத்தாத நிதி மோசடியாளர்ளின் பட்டியலை வெளியிடக் கோரி இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அதை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடுமாறு ரிசர்வ் வங்கிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி உத்தரவிட்டார். ஆனால், அவரது உத்தரவை ரிசர்வ் வங்கி ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து, இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய தகவல் ஆணையரின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டது. ஆனால், நாட்டின் பொருளாதார நலன் கருதியும், வர்த்தக ரகசியங்களைக் காரணம் காட்டியும் நிதி மோசடியாளர் பற்றிய விவரங்களை வெளியிடுவதற்கு ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.
இந்நிலையில், வாராக்கடன் விவரங்களை கோரி சந்தீப் சிங் என்பவர், மத்திய தகவல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த தகவல் ஆணையம், வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத நிதி மோசடியாளர்கள் பட்டியலையும், வாராக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தையும் தாக்கல் செய்யக் கோரி, ரிசர்வ் வங்கியின் அப்போதைய ஆளுநர் உர்ஜித் படேலுக்கு கடந்த நவம்பர் 2-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி மனு தாக்கல் செய்திருதது. அந்த மனு நீதிபதிகள் பி.பி.தர்மதிகாரி, எஸ்.வி.கோத்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வெங்கடேஷ் தோண்ட் முன்வைத்த வாதம்:
ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை கேட்காமலேயே, நிதி மோசடியாளர் விவரங்களை வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த விவரங்கள் வெளியிடப்பட்டால், அவை, நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊறு விளைவிக்கும்.சிஐசி பிறப்பித்த உத்தரவு, சட்ட விரோதமானது; சர்வாதிகாரமானது  என்று வெங்கடேஷ் வாதிட்டார். இதையடுத்து, தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT