முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளும், அதற்கான பயிற்சி வகுப்புகளும் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தாலும் அதை மாற்ற எந்த அரசும் முயற்சி மேற்கொள்ளவில்லை.
மாடுகளுக்கு ஊசி போட்டு பால் கறப்பதற்கும், கோழிகளுக்கு மருந்து மூலம் முட்டை போட வைப்பதற்கும், நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றே சொல்லலாம்.
இந்தியாவின் கோச்சிங் வகுப்புகளுக்கான தலைநகரம் என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் மட்டும், இந்த ஆண்டு இதுவரை 19 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்காக ஏராளமான மாணவ, மாணவிகள் ராஜஸ்தான் செல்கிறார்கள். அந்த வகையில் ராஜஸ்தானில் மட்டும் கடந்த 2016ம் ஆண்டு 17 பேரும், 2017ல் 7 மாணவ, மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மாணவ, மாணவிகளின் தற்கொலை அதிகரித்து வருவது, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மீதும், நுழைவுத் தேர்வுகள் மீதும் பல சந்தேகங்களையும், புகார்கைளயும் எழுப்புகிறது.
கடந்த 4 நாட்களில் 3 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதுதான், இந்த புள்ளி விவரங்களை நம்மைத் தேட வைத்துள்ளது. கடைசியாக ஐஐடியில் சேர கடந்த 3 ஆண்டுகளாக கோச்சிங் சென்று வந்த பிகார் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர்கள் அனைவரது தற்கொலைக்கும் ஒரே காரணம்தான்.. நுழைவுத் தேர்வில் சாதிக்க முடியாதோ, பெற்றோரின் கனவை நனவாக்க முடியாதோ என்ற அச்சமே இவர்களை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதுபோன்ற நுழைவுத் தேர்வுகள் எத்தனை அனிதாக்களைத்தான் இன்னமும் காவு வாங்க காத்திருக்கிறதோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.