பிரதமர் பதவிக்கான கெளரவத்தை குறைத்துவிட்டார் மோடி: கர்நாடக முதல்வர் சித்தராமையா தாக்கு
நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்கான கெளரவத்தை குறைத்துவிட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டினார்.
நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்கான கெளரவத்தை குறைத்துவிட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து பெங்களூரு விதான செளதாவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, எனது தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். முந்தைய பாஜக ஆட்சியில் ஊழல் செய்து சிறைக்குச் சென்று திரும்பிய எடியூரப்பா தன்னுடன் இருப்பதை அறிந்து கொள்ளாமல் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
குஜராத் முதல்வராக மோடியிருந்த போது லோக் ஆயுக்த நீதிபதியை நியமிக்கவில்லை, பிரதமராக லோக்பால் நீதிபதியை நியமிக்கவில்லை. முந்தைய பாஜக ஆட்சியில் எடியூரப்பாவின் ஊழலை லோக் ஆயுக்த அறிக்கையே எடுத்துக்கூறும்.
பிரதமர் மோடியின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதன்மூலம் பிரதமர் பதவியை மோடி அவமதித்துவிட்டார். பெங்களூரில் அமையவிருந்த உருக்குப்பாலம் குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இந்தத் திட்டத்தை கொண்டுவந்ததே பாஜகதான். எடியூரப்பாவின் மட்டத்தில் இருந்து பிரதமர் மோடி பேசியிருக்கக் கூடாது.
கர்நாடகத்திலிருந்து 38 சதவீதம் தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப ஏற்றுமதி நடைபெறுகிறது.
பட்டு உற்பத்தியில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதலீடுகளைத் திரட்டுவதில் 11-ஆவது இடத்திலிருந்த கர்நாடகத்தை முதலிடத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஆரம்பநிலை தொழில்முனைவோர் கொள்கையை முதல்முதலில் கொண்டு வந்ததே கர்நாடகம்தான். இதேபோல மாநிலத்தின் 157 வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்தல் மையங்களில் இணையம்வழி சந்தைப்படுத்தல் முறையை அமல்படுத்தியுள்ளது.
மின் வாகன கொள்கையை முதலில் அறிவித்தது கர்நாடகம். பொதுசுகாதாரத் திட்டம், வட்டியில்லா பயிர்க்கடன், வட்ட மருத்துவமனைகளில் டயாலிசிஸ் மையங்கள், வேளாண் பாக்கியா திட்டங்கள், மிகப்பெரிய சூரியஒளி பூங்கா போன்ற திட்டங்களை காங்கிரஸ் அரசு அமல்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் குற்றச் செயல்கள் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தெரிவிக்கும் மோடி, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மனதில் கொள்ள வேண்டும்.
மாநிலத்தில் பயிர்க் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை. ஆனால், தொழிலதிபர்கள் வங்கிகளில் பெற்றிருந்த ரூ.6 லட்சம் கோடியை வராக்கடன் என்று தள்ளுபடி செய்துள்ளது.
மத்திய அரசு வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது அரசியலமைப்புச்சட்டத்தின் கடமையாகும். அதற்காகத்தான் நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் கோடியை நிதி ஆணையம் ஒதுக்கியுள்ளது. 3 ஆண்டுகளில் கர்நாடகத்துக்கு 95,200 கோடி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் ரூ.84,500 கோடி மட்டுமே மத்திய அரசு தந்துள்ளது.
மாநிலத்தில் இருந்து வரி வருவாயாக மத்திய அரசுக்கு 9.7 சதவீத நிதி சென்றால், நமக்கு மத்திய அரசிடமிருந்து 4.65 சதவீத நிதி மட்டுமே அளிக்கப்படுகிறது. பாஜகவினருக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் நம்பிக்கையில்லை.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்காது. ராஜஸ்தானில் நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவைக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது. எனவே, பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் அதிகாரத்தில் இருந்து வெளியேறும் நாள்கள் வெகுதொலைவில் இல்லை.பிரதமர் மோடியை தனிப்பட்டமுறையில் விமர்சிப்பதை ஏற்கமாட்டேன் என்றார்.