பாஜக தலைவர்களிடையே பெண்கள் மீதான வெறுப்புணர்வு நிலவுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
பாஜக தலைவர்கள் பெண்கள் மீதான வெறுப்புணர்வு அணுகுமுறையைக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
பாஜக தலைவர்கள் பெண்கள் மீதான வெறுப்புணர்வு அணுகுமுறையைக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சுட்டுரைப் பக்கத்தில் சில விடியோ காட்சிகளுடன் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. அதில் மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரியின் சிரிப்பு தொடர்பாக மோடியின் பேச்சு அடங்கிய விடியோ காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் சோனியா காந்தி குறித்த அவரது கருத்து, சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் குறித்து மோடி கூறிய கருத்து, திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்து ஆகியவற்றின் விடியோ காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் பாஜக தலைவர்களான அருண் ஜேட்லி, மகேஷ் சர்மா போன்றவர்கள் கருத்து கூறும் விடியோ காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதனுடன் காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
பாஜகவுக்குள் பெண்கள் மீதான வெறுப்புணர்வு பரவியுள்ளது. இந்த வருந்தத்தக்க மனப்போக்கிற்கு பிரதமர் மோடியின் கருத்துகளே சிறந்த உதாரணமாகும். இந்த மனப்போக்கைக் கொண்டிருப்பவர்களின் தலைமையில், சமத்துவம் கிடைக்கும் என்று இந்தியப் பெண்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்? என்று அதில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
அக்கட்சியின் இந்த விமர்சனத்துக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் பதிலளிக்கையில் "ராகுல் தலைவரானது முதலே காங்கிரஸ் கட்சி முக்கியமான பிரச்னைகள் குறித்து அரசியல் ரீதியிலான கருத்துகளை வெளியிடுவதைக் கைவிட்டு விட்டது. இரண்டாம் தர விடியோ தயாரிப்புக் கூடமாக அக்கட்சி மாறிவிட்டது' என்றார்.