முகப்பு
இந்தியா

வேலைவாய்ப்பின்மைதான் நாட்டின் மிகப்பெரிய பிரச்னை: ராகுல் காந்தி

வேலைவாய்ப்பின்மை நாட்டின் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

வேலைவாய்ப்பின்மை நாட்டின் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு வட கர்நாடகத்தில் மூன்றாவது நாளாக திங்கள்கிழமை முகாமிட்டிருந்த ராகுல் காந்தி, ராய்ச்சூரு, யாதகிரி, கலபுர்கி மாவட்டங்களில் பேருந்தில் மக்கள் ஆசி சுற்றுப் பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ராய்ச்சூரில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே ராகுல் காந்தி பேசியது:
பெங்களூருக்கு அண்மையில் வந்த பிரதமர் மோடி, ஊழல் பற்றி பேசியிருந்தார். ஊழலை ஒழிப்பதில் அக்கறை செலுத்துபவராக இருந்தால் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்குச் சொந்தமான நிறுவனம் கடந்த 3 மாதங்களில் ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ. 80 கோடி வருமானம் ஈட்டியது குறித்து பேசியிருக்க வேண்டாமா?
மேடையில் தனக்கு வலது, இடது புறங்களில் அமர்ந்திருந்தவர்களைக் கவனித்து விட்டு பிரதமர் மோடி, ஊழல் குறித்துப் பேசியிருக்க வேண்டும்.
அவர் பேசிய மேடையிலேயே ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்று திரும்பிய எடியூரப்பா ஒருபக்கமும், அதே ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்ற முன்னாள் அமைச்சர்கள் மறுபக்கமும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பதவியை ராஜிநாமா செய்த 11 முன்னாள் அமைச்சர்கள் பின்புறமும் அமர்ந்திருந்ததை பிரதமர் மோடி கவனிக்கவில்லையா? 
தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கோடிக்கணக்கான இளைஞர்கள் பிரதமர் மோடிக்கு வாக்களித்தனர். ஆனால், கர்நாடகத்தை ஆட்சி செய்யும் முதல்வர் சித்தராமையாதான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தந்துகொண்டிருக்கிறார். சீனாவுடன் இந்தியா போட்டி போடுகிறது. 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் வேலைகளை சீனா உருவாக்கினால், இந்தியா பல மணி நேரங்களில் 450 வேலைகளை மட்டுமே உருவாக்குகிறது.
இளைஞர்களுக்கு வேலையில்லாமைதான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்வோம், எழுந்துநில் இந்தியா போன்ற பல முதலீட்டு திட்டங்களைச் செயல்படுத்தியபோதும், பிரதமர் மோடியால் 24 மணி நேரங்களில் 450 வேலைகளைத்தான் உருவாக்க முடிந்தது.
இதில் பெரும்பாலான வேலைகள் கர்நாடகத்திலிருந்து முதல்வர் சித்தராமையாவால் உருவாக்கப்பட்டவையாகும்.
எனவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்தும், விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியமைப்பது குறுத்தும் பிரதமர் மோடி பேச வேண்டும். 
வேலையில்லாமை மற்றும் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவதே இல்லை. 
இதற்கு மாறாக, கர்நாடக காங்கிரஸ் அரசு விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்துள்ளதோடு, ஹைதராபாத்-கர்நாடக மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தந்துள்ளது என்றார் அவர்.
முதல்வர் சித்தராமையா, கட்சியின் மாநிலத் தலைவர் ஜி. பரமேஸ்வர், மேலிடப் பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால், மேற்பார்வையாளர் மாணிக் தாகூர், செயல் தலைவர்கள் தினேஷ் குண்டுராவ், எஸ்.ஆர்.பாட்டீல், மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, அமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →