இந்தியா

இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது: தில்லி போலீஸ் நடவடிக்கை

DIN

தில்லியில் கடந்த 2008-இல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக அவர், இந்திய - நேபாள எல்லையில் செவ்வாய்க்கிழமை மாலையில் கைது செய்யப்பட்டு, தில்லிக்கு கொண்டுவரப்பட்டார்.
இதுதொடர்பாக தில்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
ஆரிஸ் கான் என்ற அந்த பயங்கரவாதி, தில்லியின் பட்லா ஹவுஸ் பகுதியில் கடந்த 2008, செப்டம்பர் 19-இல் தனது கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு சிலர் கைதாகினர். ஆனால், ஆரிஸ் கான் மட்டும் தப்பியோடிவிட்டார். இந்த நடவடிக்கையின்போது, காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா உயிரிழந்தார்.
தில்லியில் 2008, செப்டம்பர் 13-இல் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட 6 தினங்களுக்கு பின் இச்சம்பவம் நிகழ்ந்தது. அதன் பிறகு 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆரிஸ் கான், இந்திய - நேபாள எல்லையில் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரைச் சேர்ந்த இவர், பொறியியல் பட்டதாரி ஆவார். வெடிகுண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். தில்லியில் இருந்து தப்பிய பிறகு, நேபாளத்தில் அடையாளத்தை மாற்றிக் கொண்டு பள்ளி ஆசிரியராக அவர் பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது. 
இதனிடையே, தில்லிக்கு அழைக்கு வரப்பட்ட ஆரிஸ் கான், இங்குள்ள நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். தில்லி தொடர் குண்டுவெடிப்பு மட்டுமன்றி, வாராணசி, ஜெய்ப்பூர், ஆமதாபாத் ஆகிய இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளிலும் ஆரிஸ் கானுக்கு தொடர்பிருப்புள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதியான அப்துல் சுபான் குரேஷி (46), கிழக்கு தில்லியில் அண்மையில் கைது செய்யப்பட்டார். தற்போது மேலும் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளை காக்கும் திரிணமூல் அரசு: பாஜக குற்றச்சாட்டு

ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

SCROLL FOR NEXT