இந்தியா

'குறைந்த செலவில் ஏவுவாகனங்கள், செயற்கைக்கோள்கள் தயாரிக்க ஆய்வு'

DIN

குறைந்த செலவில் உயர்திறன் கொண்ட ஏவு வாகனங்கள், செயற்கைக்கோள்கள் தயாரிப்பது குறித்த ஆய்வை வருங்காலங்களில் மேற்கொள்ள உள்ளோம் என்றார் இந்திய விண்வெளித்துறைச் செயலரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விண்வெளி ஆணையத்தின் தலைவருமான கை.சிவன்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 34-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவர் பேசியது: வசதி நிறைந்த மற்றும் ஏழ்மை நாடுகளுக்கு இடையே காணப்படும் இடைவெளி பெரிய அளவில் இருப்பதோடு, இந்த நாடுகளுக்கு இடையேயுள்ள தொடர்பு முறைகளும் பயன் அளிப்பதற்கு ஏற்றதாக இல்லை.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை கடந்த 1975 ஆம் ஆண்டு ரஷ்ய ராக்கெட் மூலம் ஏவினோம். ஆனால், இன்றைய நிலையில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை நம் நாட்டிலிருந்து ஏவும் நிலைக்கு வளர்ச்சியடைந்து உள்ளோம்.
2017, ஆகஸ்டில் பிஎஸ்எல்வி சி39 யுடன் 109 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்ட உலக சாதனை நிகழ்வாகக் கருதப்படுகிறது. முனைவர் விக்ரம்சாராபாயின் கனவை இன்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நிறைவேற்றியிருக்கிறது. 
இன்றைய நிலையில் தொலைஉணர்வு பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள்கள் ஏவுவதிலும் இந்தியா முன்னணி பெற்ற நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
நாம் விண்ணில் ஏவிய செயற்கைக்கோள்கள் மூலம் டிடிஎச், வங்கி, ஏடிஎம் மையங்களுக்கான பயன்பாடு, தொலைத்தொடர்பு வசதிகள், தொலை உணர்வு, பேரிடர் மேலாண்மை, புவி மதிப்பீட்டுப் பயன்பாடுகள், தொலை மருத்துவம், தொலைக் கல்வி உள்ளிட்ட ஏராளமானத் துறைகளின் மூலம் எண்ணற்ற பயன்பாடுகள் கிடைத்து வருகின்றன. அனைத்து சேவைகளும் உலகத்தரம் வாய்ந்த அளவில் வழங்கப்படுகின்றன.
குறைந்த செலவில் உயர்திறன் கொண்ட ஏவு வாகனங்கள் மற்றும் செயற்கைக்கோள்களைத் தயாரிப்பது குறித்த ஆய்வுகளை வருங்காலத்தில் மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகிறோம்.
தற்போது சோதனை அளவில் நடைபெற்று வரும் மறு பயன்பாட்டுத் தன்மை கொண்ட ஏவு வாகனங்கள் பயன்பாடு, விரைவில் முழு அளவில் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். 
இன்றைக்கு செயற்கைக்கோள் இல்லாமல் எதுவும் இல்லை. செயற்கைக்கோள்தான் உலக வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிறது. 
இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலான செயற்கைக்கோளைத் தயாரிப்பதற்கான ஆய்வும் நடைபெற்று வருகிறது. 
விவசாயிகளுக்குத் தேவையான காலநிலை, பருவமழை பற்றிய ஆய்வுசெய்யும் வகையில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்படும்.
பிரதமர் நரேந்திமோடியின்எண்ணத்தின்படி சாதாரண மக்களுக்கும் பயன்படும் வகையில் செயற்கைக்கோள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை நோக்கி எங்கள் பயணம் இருக்கிறது என்றார் சிவன்.
பட்டமளிப்பு விழாவுக்கு தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பல்வாரிலால் புரோஹித் தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT