முகப்பு
இந்தியா

அங்கன்வாடி பயனாளிகளுக்கு உணவுக்கு பதில் பணம் வழங்கும் திட்டம் இல்லை

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் பயனாளிகளுக்கு உணவுக்கு பதிலாக அவர்களின் வங்கிக் கணக்கில் பணமாக செலுத்தும் திட்டம் இல்லை என்று மாநில அரசுகளும்,

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் பயனாளிகளுக்கு உணவுக்கு பதிலாக அவர்களின் வங்கிக் கணக்கில் பணமாக செலுத்தும் திட்டம் இல்லை என்று மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், அங்கன்வாடி உள்ளிட்ட தாய்-சேய் நல மையங்கள் மூலம் 6 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசு சார்பில் பால் உள்ளிட்ட குழந்தைகளுக்கான உணவு வழங்கப்பட்டு வருகிறது. 3 முதல் 6 வயது வரையிலான சிறார்களுக்கு உணவு சமைத்து அளிக்கப்படுகிறது. இதுதவிர கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் குழந்தை பிறந்த 6 மாதம் வரை இத்திட்டத்தின்கீழ் ஊட்டசத்து உணவு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் அரசுப் பணம் வீணாவதைத் தடுக்க பயனாளிகளின் வங்கிக் கணக்குகளை பணத்தை டெபாசிட் செய்யலாம். இதனை முதல்கட்டமாக சில மாவட்டங்களில் மட்டும் முன்னோடித் திட்டமாக செயல்படுத்திப் பார்க்கலாம் என்று நீதி ஆயோக் முன்பு ஆலோசனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நீதி ஆயோக் ஆலோசனைப்படி இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து உத்தரப் பிரதேச மாநில அரசு தலைமைச் செயலாளரிடம் இருந்து மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு, பதிலளித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஆர்.கே.ஸ்ரீவஸ்தவா கடிதம் எழுதியுள்ளார். உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாது நாட்டின் உள்ள அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இந்த திட்டம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இப்போதைய நிலையில் பயனாளிகளின் கணக்கில் பணத்தைச் செலுத்தும் திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பு இல்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பணத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தினால், அப்பணம் குழந்தைகள் உணவுக்காகவும், கர்ப்பிணிகளின் ஊட்டசத்துக்காகவும்தான் செலவிடப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதால் அதனை அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.