கோரக்பூர் கலவரம்: ஆதித்யநாத் மீது மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு உள்ள தொடர்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு உள்ள தொடர்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.
கோரக்பூரில் கடந்த 2007-ஆம் ஆண்டு இரு மதத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. வெறுப்பை தூண்டும் வகையில் யோகி ஆதித்யநாத் பேசியதுதான் இந்த வன்முறைக்கு காரணம் என்று அப்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
மேலும், அப்போது வன்முறையில் உயிரிழந்த ஒருவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க கோரக்பூர் எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத், தனது ஆதரவாளர்களுடன் சென்றார். இதனால், மீண்டும் வன்முறை ஏற்படும் என்று கருதிய போலீஸார் ஆதித்யநாத்தை கைது செய்தனர்.
இதையடுத்து, அவர் நடத்தி வந்த ஹிந்து யுவ வாஹினி அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ரயில் பெட்டி மற்றும் பேருந்துக்கு தீ வைத்ததுடன், பல்வேறு பொதுச் சொத்துகளுக்கும் அவர்கள் சேதம் விளைவித்தனர்.
இதையடுத்து பல்வேறு இடங்களில் வன்முறையாளர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது, யோகி ஆதித்யநாத் 11 நாள்களுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டு பர்வீஸ் பர்வாஸ், ஆசாத் ஹயாத் ஆகியோர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அதில் 'கலவரத்தைத் தூண்டிய யோகி ஆதித்யநாத் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். ஏனெனில், இப்போது மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். எனவே, அவர் மீதான குற்றச்சாட்டை அவரே விசாரிப்பது போன்ற நிலை உள்ளது. மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் யோகி ஆதித்யநாத் பேசியதாக வெளியே ஆடியோவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வர, சிபிஐ விசாரணை தேவை' என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கை தொடுத்த பர்வீஸ் மீது கோரக்பூர் கலவரத்தில் பங்கேற்றதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக தனது தீர்ப்பை பின்னர் அறிவிப்பதாகக் கூறி கடந்த டிசம்பர் 22-ஆம் தேதியன்று ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், கோரக்பூர் கலவரம் தொடர்பாக யோகி ஆதித்யநாத் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.