திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் சிங்கம் இருந்த பகுதியில் குதித்த மனநலம் சரியில்லாத இளைஞர் ஒருவர் ஊழியர்களால் மீட்கப்பட்ட 'திக் திக்' நிமிடங்கள் அடங்கிய விடியோ வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பல்லம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் தன்னுடைய பகுதியில் இருந்து காணாமல் போய் விட்டதாக ஊடகங்களில் சமீபத்தில் விளம்பரங்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் முருகன் திருவனந்தபுரத்தில் உள்ள வனவிலங்கு காப்பகம் ஒன்றுக்கு புதனன்று காலை வந்துள்ளார். அங்கு பெண் சிங்கம் ஒன்று அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றார். அந்த பகுதியைச் சுற்றி ஐந்தடி உயரமுள்ள தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 11 மணியளவில் வேலியைத் தாண்டி குதித்த முருகன், முழங்காலிட்டு தவழ்ந்தவாறு சிங்கம் சுற்றித்திரியும் இடத்தை நோக்கிச் சென்றார்.
இதைக் கண்ட பார்வையாளர்கள் கூச்சலிட்டனர். இதனையடுத்து உஷாரான வனவிலங்கு காப்பக பாதுகாவலர்கள் சிலர், உடனடியாக அங்கிருந்த பெண் சிங்கத்தின் கவனத்தை வேறு பக்கமாக திசை திருப்பினர்.
அதே நேரம் வேறு சில காவலர்கள் முருகனை இழுத்துப் பிபிடித்து குண்டுக்கட்டாக தூக்கி வந்து பாதுகாப்பான இடத்தில் சேர்த்தனர். அவரிடம் விசாரித்த பொழுது சிங்கத்திடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று எண்ணிச் சென்றதாக கூறினார். பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முருகன் மனநிலை குன்றியவர் போல் காணப்படுவதாக பார்வையாளர்கள் சிலர் குறிப்பிட்டனர்.
இந்த பரபரப்பான நிமிடங்களை அங்கிருந்த பார்வையாளர்களில் சிலர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அது இப்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
விடியோ:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.