இந்தியா

பிரதமருடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்

DIN

பிரதமர் மோடியை தில்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். ஆந்திரத்துக்குத் தேவையான உதவிகளை அளிக்குமாறு அப்போது பிரதமரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆந்திரத்திலிருந்து தெலங்கானா தனி மாநிலமாக உதயமான பிறகு இரண்டுக்கும் பொதுவாக ஹைதராபாதே தாற்காலிகத் தலைநகராக இருந்து வருகிறது.
ஆந்திரத்துக்கு அமராவதியை புதிய தலைநகராக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசு தரப்பில் ஏற்கெனவே ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமராவதியில் புதிய தலைமைச் செயலகம், அமைச்சர்கள் குடியிருப்பு, எம்எல்ஏ விடுதி உள்ளிட்டவற்றை கட்டமைக்க ரூ.11,000 கோடி நிதியுதவி வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பிரதமரைச் சந்தித்துப் பேச ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரம் கேட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை நேரம் ஒதுக்கியிருந்தது.
அதன்படி, பிரதமர் மோடியைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஆந்திர மாநிலத்தைப் பொருத்தவரை வேளாண் துறையே பிரதானமாக உள்ளது. தென்னிந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் விளைபொருள் உற்பத்தியில் ஆந்திரம் முதன்மையாக இருக்கிறது. அதேவேளையில் சேவைத் துறைகளில் மிகவும் பின்தங்கியுள்ளது.
தெலங்கானா பிரிக்கப்பட்டதனால் இத்தகைய விளைவுகள் ஆந்திரத்துக்கு ஏற்பட்டுள்ளன. அதனை மீட்டெடுக்க மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட உதவிகள் போதுமானதாக இல்லை. இந்த விவகாரத்தால் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணியில் பாதிப்பு ஏற்படுமா? எனக் கேட்கப்படுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சியில் உள்ளோம். எனவே, இதன் காரணமாக கூட்டணிக்குள் எந்த விரிசலும் ஏற்படாது என்றார் சந்திரபாபு நாயுடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT